Thursday, September 30, 2010

கிராம அளவில் வேளாண்பயிர் காப்பீடு திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க த.உ.மு எதிர்ப்பு!

கிராம அளவில் வேளாண் பயிர் காப்பீடுத் திட்டத்தை சில மாவட்டங்களில் நடைமுறைப் படுத்த இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் முன் வந்திருப்பதை தமிழக உழவர் முன்னணி வரவேற்பதாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக உழவர் முன்னணி கோரி இருக்கிறது.

1.இக்காப்பீட்டுத்திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

2.இக்காப்பீட்டுத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது.

3.ஒரு கிராமத்தை அலகாகக் கொள்வது முன்னேற்றமே என்றாலும் “ஏக்கர்” வாரியாக பயிர்காப்பீடு செய்வதே உழவர்களுக்கு முழுமையான பலன் அளிக்கும் என்பதால் அடுத்து ஏக்கர் வாரியாக பயிர்காப்பீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக உழவர்களுக்கு முழுமையாக பலனளிக்கக் கூடிய மேற்குறித்த கோரிக்கைகள் நிறைவேற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரியுள்ளது.

Wednesday, September 15, 2010

மாற்று மின் மோட்டார் வழங்கும் திட்டம் தமிழக உழவர் முன்னணி முதல்வருக்கு கோரிக்கை!


மின் சேமிப்பை கருதி தமிழக உழவர்களுக்கு மாற்றுமின் மோட்டார்கள் தமிழக அரசு வழங்க உள்ள திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

இத்திட்டத்தால் பயன் பெரும் உழவர்களுக்கு கீழ்கண்ட வகையில் முன்னுரிமைக் கொடுத்து மின்மோட்டார்களை வழங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் மின்மோட்டார் இணைப்புகளை அவை இணைப்பு பெறப்பட்ட ஆண்டின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரித்து மிகப் பழமையான மின்மோட்டார்களுக்கு முதலில் என்ற வரிசையில் மின்மோட்டார்களை வழங்கலாம்.அவ்வாறு வழங்கும்போது,மின் இணைப்பு பெற்ற தேதியில் இருந்த குதிரைத்திறன் தொடர்ந்து இன்று வரை பயன்பாட்டில் இருந்தால் அவர்களுக்கு முதலாவதாக வழங்கலாம்.

இடையில் கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார்களை அனுமதி பெற்று பொருத்தி இயக்கிவருபவர்களுக்கு அடுத்தும்,அனுமதிபெறாமல் கூடுதல் குதிரைச்சக்தியை பயன்படுத்தி வந்தால் அவர்களை தானே முன்வந்து அறிவிக்கும் திட்டத்தின் கீழ்.(Voluntary Disclosure Scheme) வாய்ப்புக்கொடுத்து கூடுதல் மின்சுமைக்கு அனுமதி வழங்கி அதற்கடுத்து அவர்களுக்கு மின்மோட்டார்கள் வழங்கலாம்.

மேலும் உழவர்களை பெரிய,சிறு,குறு விவசாயிகள் என்ற பாகுபாடு செய்யாமல் மின்மோட்டார்கள் பயன்படுத்தும் அனைத்து உழவர்களுக்கும் புதிய மின் மோட்டார் வழங்கவேண்டும்.

அடுத்து அண்மையில் புதிய மின் மோட்டாரை வாங்கி பொருத்தி பயன்படுத்திவரும் உழவர்களுக்கு மீண்டும் புதிய மின் மோட்டார் வழங்குவதற்கு பதிலாக பயன்பாட்டில் உள்ள மோட்டாருக்கு உரிய தொகையை பணமாக வழங்கிட வேண்டும்.

இத்திட்டத்தால் அனைத்து உழவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கிலும் சிலருக்கு சலுகைக் காட்டப்படுகிறது என்ற குறை கூறுதலை தவிர்க்கும் பொருட்டும் மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

Monday, September 6, 2010

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற இந்திய,தமிழக அரசுகளைக் கண்டித்துஆர்ப்பாட்டம்!



தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்று கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற அரசை கண்டித்து நாகை மாவட்டம் மணல்மேட்டில் நடந்த தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

Saturday, September 4, 2010

ஆலைகளின் வேதியியல் கழிவுகளால் பாதிக்கபட்ட உழவர்கள் மீது கடலூர் காவல்துறை வழக்கு


கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகளால் நிலமும்,நீரும்,காற்றும் பாதிக்கப்படுவதை எதிர்த்து உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.ஆனால் அரசும் அதிகார வர்க்கமும் அசைவற்று இருந்து வருகின்றன.
அண்மையில் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட வேதியியல் ஆலைகழிவுகள் சங்கொலிகுப்ப கிராம பகுதியில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களை பாதித்துள்ளது;வேதியியல் கலந்த நீரைக் குடித்த இரண்டு மாடுகள் இறந்துள்ளன என்பதற்காக உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.சம்மந்தப்பட்ட ஆலைகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடலூர் முதுநகர் காவல்துறை போராடிய மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.இதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தமிழக உழவர் முன்னணி
1.பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்
2.வேதியியல் கழிவுகளை தூய்மைப்படுத்தாமல் வெளியேற்றும் ஆலைகளின் உரிமத்தை நீக்க வேண்டும்
3.புதிய வேதியியல் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசைக் கோருகிறது.