Saturday, January 8, 2011

ஜூனியர் விகடனின் அவதூறு செய்திக்கு; தமிழக உழவர் முன்னணி மறுப்பு


உதயமாகிறது லெட்டர் பேடு கட்சிகள் உதவுகிறதா அண்ணாமலை யுனிவர்சிட்டி”,என்ற தலைப்பில் 12-01-2011 ஜூனியர் விகடன் இதழில் க.பூபான் என்பவர் எழுதியுள்ள செய்தி எங்களது தமிழக உழவர் முன்னணி குறித்து அடிப்படையற்ற அவதூறுகளைப் பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைகழகத்திற்கு எதிராக சுவரொட்டி பரப்புரை நடத்தி மிரட்டல் விடுத்து சீட்டுகள் பெறும் தரகு வேலையில் ஈடுபடுவதாக சில அமைப்பு பெயர்களை அக்கட்டுரை அடுக்குகிறது.அதில் தமிழ் உழவர் முன்னணிஎன்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

எங்கள் அமைப்பு தமிழக உழவர் முன்னணி.இது கட்சியல்ல,கட்சி சார்பற்ற உழவர் அமைப்பு நாங்கள் லெட்டர் பேடு அமைப்பும் அல்ல.பெருந்திரள் உழவர்களைத் திரட்டி தமிழ்நாட்டு உழவர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்பு.அது மட்டுமின்றி, சிதம்பரத்தில் மட்டும் இருக்கும் அமைப்பல்ல கட்லூர் மாவட்டத்தின் வேறு பல பகுதிகளிலும், விழுப்புரம், தஞ்சை,நாகை,தூத்துக்குடி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு.

எங்கள் அமைப்பின் போராட்ட செய்திகளும்,பொதுக் கூட்ட செய்திகளும், எங்கள் அமைப்பு நிர்வாகிகளின் நேர்காணல்களும் பசுமை விகடனிலும், ஜூனியர் விகடனிலும், தினமணி, தினதந்தி, தினகரன், தினமலர்,மாலைமுரசு உள்ளிட்ட பல்வேறு நாளேடுகளிலும் பல தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன.

அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் வேளாண் புலம் நடத்தும் உழவர் பயிற்சி முகாம்களிலும் ,கருத்தரங்குகளிலும் எங்களது உழவர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன.அதே நேரம் இப்பல்கலைகழகத்தின் வேளாண் புல பேராசிரியை ஒருவர் மான்சாண்டோவின் மரபீனி கத்தரி விதைக்கு இசைவு வழங்கியதில் முக்கிய பங்காற்றிய போது அதனை எதித்து எங்கள் தமிழக உழவர் முன்னணி பரப்புரை-போராட்டங்கள் நடத்தியது.

எந்தக் காலத்திலும்,எந்த இடத்திலும் பதவி,பணத்திற்காக பல்லிளிக்காத நேர்மை உரமிக்க போராட்ட அமைப்பு எங்கள் தமிழக உழவர் முன்னணி. நாங்கள் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சீட்டு வாங்கும் தரகு வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது எந்த அடிப்படையுமற்ற அவதூறு ஆகும். ஊரறிந்த உண்மை இவ்வாறு இருக்க ஜூ.வி செய்தியாளர் பூபானுக்கு மட்டும் இது தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.

ஒரு வேளை எங்கள் அமைப்பின் பெயரின் சாயலில் தமிழ் உழவர் முன்னணிஎன்ற பெயரால் யாராவது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது தமிழக உழவர் முன்னணியிலிருந்து வேறுபட்ட ஒன்று என தெளிவு படுத்தி எழுத வேண்டியது பொறுப்புள்ள செய்தியாளரின் கடமையாகும்.நாங்கள் வெளியிடும் துண்டறிக்கை,சுவரொட்டி,சுவர் விளம்பரம் ஆகியவற்றில் தொடர்பு முகவரி,தொடர்பு எண்கள் ஆகியவை அறிவிக்கப்படுகின்றன.உண்மைச் செய்தியைக் குழப்பமில்லாமல் கொண்டுவருவதில் அக்கறை இருந்தால் எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவது எளிதானசெயலாகும்.

நாங்கள் பெரிதும் மதிக்கும் விகடன் குழும ஏடு ஒன்றிலிருந்து எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளிவந்திருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

இந்த உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கச் செய்தி வெளியிடுமாறு ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

0 கருத்துகள்:

Post a Comment