Friday, October 5, 2012

தமிழகம் கேட்பது காவிரியில் தனக்கு உரிமையான நீரை மட்டுமே. மத்தியக் குழு வருகைத்தந்து போடும் பிச்சையை அல்ல! மத்தியக் குழு வருகைக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்



பிரிட்டிஷ் இந்தியா காப்பாற்றிக் கொடுத்த காவிரி நீர் உரிமையை குடியரசு இந்தியா பறித்துக் கொண்டதோடு மத்தியக் குழுவை அனுப்பி தமிழக உழவர்களை மேலும் இழிவுப்படுத்துகிறது.

காவிரி நீர் குறித்த சிக்கலே, சட்டப்படி நடைமுறையில் உள்ள இடைக்காலத் தீர்ப்பின் படி மாதந்தோறும் கர்நாடகம் நீரை திறந்துவிடாததால் ஏற்பட்டுள்ளதாகும். மிகக்குறைந்தே அளவே ஆயினும் சட்டப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமரின் ஆணையையும் துச்சமாக மதிக்கும் கர்நாடக அரசின் மீது இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாததோடு, தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசு அதன் தொடர்ச்சியாக இப்போது தேவையில்லாமல் மத்தியக் குழுவை அனுப்பியுள்ளது.

தமிழகம் கேட்பது காவிரியில் தனக்கு உரிமையான நீரை மட்டுமே. மத்தியக் குழு வருகைத்தந்து போடும் பிச்சையை அல்ல. வெள்ளம்,வறட்சி காலத்தில் கூட தமிழக அரசு கேட்கும் நிவாரணம் தொகையை தேவை ஏற்படின் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அமைப்புகளின் மூலம் சரிபார்த்துக் கொண்டு வழங்க வேண்டும். தமிழகத்தை ஒரு காலனி போல் இந்திய அரசு கருதிக்கொண்டு சில இந்திய அரசு அலுவலர்களை அனுப்பி ஆய்வு  செய்வதாக கூறுவது தமிழக மக்களை இழிவுப்படுத்தும் செயல் என தமிழக உழவர் முன்னணி தொடர்ந்து கூறி வருகிறது.
ஆங்கில அரசு பாதுகாத்துக் கொடுத்த காவிரி நீர் உரிமையை காலில் போட்டு மிதிப்பதோடு தொடர்ந்து தமிழகத்தை இழிவுப்படுத்தும் இந்திய அரசின் இச்செயலை தமிழக உழவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

Tuesday, October 2, 2012