Friday, December 31, 2010

காவிரி சிக்கல் இனப்பகையால் வருவது;கிருஷ்ணா நதிநீர் தீர்வு இன ஒற்றுமையால் விளைவது;



வெளியாகியுள்ள கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஆந்திரா 1001 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடகம் 911 டி.எம்.சி. தண்ணீரும்
மகாராஷ்டிரா 666 டி.எம்.சி தண்ணீரும் பெறுகின்றன.

தீர்ப்பின் படி ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருந்தாலும் மற்ற மாநிலங்கள் பெரும் எதிர்ப்பு ஏதும்மின்றி ஏற்றுக் கொண்டிருகின்றன.மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பு தமிழகத்திற்கு வெறும் 205 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியது,(தமிழகம் 489 டி.எம்.சியை கோரியது)காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் அதையும் குறைத்து 176 டி.எம்.சி நீரை ஒதுக்கி தமிழகத்தை வஞ்சித்தது.

தமிழகத்தை கேவலமாக வஞ்சித்த இந்த தீர்ப்பைக்கூட கர்நாடகம் ஏற்கவில்லை.ஒரு சொட்டு தண்னீர் கூட தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று கர்நாடகம் வெளிப்படையாக சட்டமன்றத்தில் அறிவிக்கிறது.தமிழகத்திற்குள் வழிந்து வரும் (ஒகேனக்கல்) தண்னீரை குடிநீருக்கு பயன்படுத்துவதை கூட கர்நாடகம் எதிர்க்கிறது.

வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அரசு கர்நாடகத்திற்கு துணையாகவே செயல்பட்டது.தமிழகத்தை ஆண்டவர்கள் தமிழக நலனை பலிகொடுத்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

காவிரி சிக்கலில் கர்நாடகத்திற்கு துணை நிற்பது போலவே பாலாற்று சிக்கலில் ஆந்திராவுக்கும்,முல்லை பெரியாறு அணை சிக்கலில் மலையாளிகளுக்கும் இந்தியா வெளிப்படையாகவே உதவிசெய்கிறது.

அனைவருக்கும் ஏன் தமிழினத்தின் மீது இவ்வளவு பகை?தமிழகத்தின் மீது இந்தியாவும் அதன் வழிவந்த மாநிலங்களும் காட்டும் இனப்பகையை தமிழக உழவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தமிழக ஆற்றுநீர் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------------------------
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். -------------------------------------------------------------------------------------------------------------

இருமடங்காகும் தமிழக உழவர்களின் தற்கொலை

2009-ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் தமிழக உழவர்களின் தற்கொலைகள்.

கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் உழவர்களின் தற்கொலைச் சாவுகள் குறைந்துவரும் வேளையில் 2009-ஆம் ஆண்டில் தமிழக உழவர்களின் தற்கொலை எண்ணிக்கை 512-லிருந்து 1060 ஆக உயர்ந்துள்ளது.அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அவலம்.(இந்து நாளிதழ் 28.12.10)
தமிழக உழவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருத்தல் ,நீர் இறைவைகளுக்கு இலவச மின்சாரம் தருதல்,ஏறக்குறைய நிலவரி இல்லை என்ற நிலை இருப்பினும் உழவர்களின் தற்கொலைகள் மட்டும் குறையவில்லை.

ஆற்றுநீர் உரிமையை நிலைநாட்ட அக்கறை அற்ற தமிழக ஆட்சிகள்.தமிழகத்தை வஞ்சிக்கும் தில்லி ஆட்சி.பருவமழை சீற்றத்தின் மடியில் தமிழக உழவர்கள்;பாசன வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி,பராமரித்து,முறையான நீர் மேலாண்மை செய்யாத அரசுத்துறைகள்;இதனால் ஓரிரு நாள் மழையாலேயே வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்;பயிர்கள் சேதமடையும் உழவர்களுக்கு பயன் தராத காப்பீட்டு முறை;ஆள் பற்றாக்குறை;உயரும் உற்பத்தி செலவுகள் இவற்றையெல்லாம் மீறி விளையும் விளைச்சலுக்கும் இலாபமற்ற விலை.விளைவு மேலும் மேலும் உழவன் கடனாளியாகிறான்.

ஊருக்கு உணவளிக்கும் உழவன் டிராக்டர் போன்ற உழுவை இயந்திரங்கள் வாங்க கடனளிக்க கூட்டுறவு வங்கிகளும்,அரசுத்துறை வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன.இதனால் அதிகவட்டிக்கு தனியார்துறை வங்கிகளில் கடன்பெற வேண்டிய கட்டாயம்.

இப்படி எல்லா முனைகளிலும் தாக்கப்படும் தமிழக உழவர்கள் விழித்தெழிந்து போராட வேண்டும்;வேளாண்மக்கள் வாழப்பிறந்தவர்கள்:வாழ்விப்பவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் --குறள்--உழவு
------------------------------------------------------------------------------------------------------

உழவர்கள் ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்

Thursday, December 23, 2010

சுற்றறிக்கை 2/10

கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தி,பொருளாதார தடை விதித்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின் படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஆற்றல் அற்ற தமிழக அரசுகள்;நமக்குரிய காவிரிநீரை போராடி பெற வேண்டும் என்ற அக்கறை இல்லாத உழவர்கள்; தடுக்க இயலாமல் காவிரியில் வழிந்துவரும் நீரைக் கொண்டு பருவம் தவறி பயிரிட்டாலும்,நீர் மேலாண்மையிலும்,வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசுகள் காட்டும் அலட்சியத்தால் ஓரிரு நாள் மழையாலேயே ஏற்படும் பயிர்சேதம்; பயிர் சேதமடையும் உழவர்களுக்கு பயன்தராத காப்பீட்டு முறை; இவற்றையெல்லாம் மீறி விளையும் வேளாண் பொருட்களுக்கு இலாபமற்ற விலை; இதனால் நிலத்தை விற்றுவிட்டு வேளாண்மையை விட்டு வெளியேறினால் போதும் என்ற பரிதாப நிலையில் வேளாண் குடும்பங்கள்; இம்மண்ணையும் இழந்தபின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கசப்பான கேள்விக்கு விடை அறிய விரும்பாத வேளாண் மக்கள்,இச்சூழலில் தான் தமிழக வேளாண்மையையும் மண்ணையும் காக்கும் உறுதியுடன் தமிழக உழவர் முன்னணி போராடி வருகிறது.

நமது அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 19.12.10 அன்று தலைவர்.கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.செயலாளர் சி.ஆறுமுகம் நடந்துள்ள பணிகள் குறித்தும் எதிர்காலப்பணிகள் குறித்தும் விளக்கினார்.

முதலாவதாக த.உ.மு செயற்குழு உறுப்பினர் பொறியாளர் என்.ஜெயபாலன் தான் தொகுத்த புள்ளிவிவரப்படி ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு செலவு ரூ.21850/- என்றும் விளைச்சல் சராசரி 18 குவிண்டால் என்றும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைத்தப்படி 50 விழுக்காடு இலாபம் கிடைக்க வேண்டுமெனில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/- கிடைக்க வேண்டும் என்று விளக்கினார்.

வேளாண்மைக்கு ஆகும் செலவை முறையாக கணக்கிடும் பழக்கம் இல்லாததால் ஒரு ஏக்கருக்கு ரூ.10000/- (அ) 12000/- செலவாவதாக உழவர்களே கூறும் பரிதாப நிலை இருப்பது கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

பெண்ணாடம் பகுதி தமிழக உழவர் முன்னணியினரும் கரும்புக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/- வழங்கப்பட வேண்டும் என்றனர்.இதில் கரும்புசக்கை எரிபொருளாக பயன்படுத்தப்படுவது,கழிவுப்பாகுவிலிருந்து கிடைக்கும் ட்ரை அய்ஸ்,உணவுக்கான ஈஸ்ட்,மருந்துகள்,சிட்ரிக் ஆசிட்,எரிசாராயம் போன்றவற்றால் ஆலைக்கு கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படவில்லை. இவற்றை கணக்கில் கொண்டால் ஆலை டன் ஒன்றுக்கு ரூ.3000/-க்கும் மேல் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிவரும்.ஆனாலும் நமது உடனடி கோரிக்கையாக டன் ஒன்றுக்கு ரூ.3000/- கோருகிறோம்.

ஆகவே ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/-ம்மும் ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/-ம்மும் கோரி,வரும் 3.01.2011 அன்று காலை சிதம்பரத்தில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.வேளாண்மை பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால்தான் நம் குடும்ப செலவுகளையும்,கல்வி,மருத்துவம் போன்ற செலவுகளையும் ஈடுகட்ட முடியும்.நம் மண்ணையும் காத்துக்கொள்ள முடியும்.

தமிழக உழவர் முன்னணி கட்சி சார்பற்றது: எந்த தேர்தல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கும் அமைப்பல்ல.வேளாண்மையையும் மண்ணையும் காக்க உறுதியுடன் போராடும் நம் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பெரும் திரளாக உழவர்களைத் திரட்டும் வகையில் பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, December 16, 2010

வெள்ளச்சேதம் மத்தியக்குழு வருகை,தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்


வடகிழக்கு பருவமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பயிர்ச்சேதம்,பொருட்சேதம் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அமைச்சர்களும்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தினரும் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர்.பயிர்கள் மூழ்கி கிடந்த போது பார்வையிட்டு பாதிப்பின் அளவை புரிந்துவைத்திருப்பவர்கள் தமிழக அமைச்சர்களும் I.A.S அதிகாரிகளுமே ஆவர்.


இவர்கள் பரிந்துரைப்பதை ஏற்காமல் வெள்ளம் வடிந்து பின் ஏற்பட்ட மழையால் பாதிப்பின் சுவடு மறைந்துவிட்டுள்ள நிலையில் காலங்கடந்து மத்தியக்குழு பார்வையிட வருவதால் எப்பயனும் இல்லை.இது ஒரு தேவையற்ற சடங்கு.



10நாட்களுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்து வெள்ளம் வடிந்ததும் மிச்சம் இருக்கும் பயிரை காப்பாற்றி விடலாம் என்கிற ஆசையில் மீண்டும் உரத்தை போட்டு உழவர்கள் பயிரை பசுமையாக மாற்றி இருக்கிறார்கள்.ஆனால் இப்பயிர்கள் விளைந்தாலும் வழக்கமான மகசூலில் நான்கில் ஒரு பங்குக்கூட கிடைக்காது என்பது வேளாண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும்.
இந்த உண்மை தெரிந்தும் வேறுவழியற்ற உழவன் வயலில் உரத்தைக் கொட்டி இயற்கையோடு போராடுகிறான்.

நாற்சக்கர வாகனங்களில் பவனி வரும் இந்திய அரசு அலுவலர்களுக்கு இது புரியாது,பெரும் பாதிப்பு ஏதும் இல்லை என்றுதான் கூறுவார்கள்.



இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் கூற்றை ஏற்காமல் தனக்கென்று வரிவசூல் செய்யும் மண் இல்லாத மத்திய அரசு ஒரு சில அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்வதென்பது தமிழக மக்களையே அவமதிக்கும் செயலாகும்.பிரிட்டிஷ் ஆட்சியின் அணுகுமுறையையே இந்திய அரசும் கடைப்பிடிக்கிறது.இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.


தமிழக உழவர்கள் மத்தியக்குழுவை புறக்கணிக்க வேண்டும்.தமிழக அரசு கொடுக்கும் அறிக்கையை ஏற்று பணமளிக்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

Tuesday, December 14, 2010

வெள்ள நிவாரணம் தமிழக அரசுக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


ஓரிரு நாள் மழையால் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதங்களுக்கு இயற்கையின் எதிர்பாராத சீற்றம் முதன்மைக் காரணமல்ல.தமிழக அரசின் கொள்கை முடிவுகளும்,நீர் மேலாண்மையிலும் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசு காட்டிய அலட்சியமுமே காரணம்.

கர்நாடகத்திற்கு பொருளாதார தடை விதித்து அரசியல் நெருக்கடி கொடுத்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன்-12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால் ஆண்டுதோறும் ஏற்படும் சேதத்தின் அளவு குறைந்திருக்கும்.

அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் துனையுடன் தான் நீர்நிலைகள், வடிகால்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. புறவழிச்சாலைகளும், மேம்பாலங்களும், புதியகுடியிருப்புகளும் கட்டப்படும் போது அடைக்கப்படுவது வாய்கால்களே.ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயலாவதில்லை.

உழவர்களுக்கு உரிமையான வீராணம் ஏரி சென்னை குடிநீர் வடிகால் வாரிய பொறுப்புக்கு சென்றுவிட்டதால் ஏரியில் ஆண்டு முழுவதும் கிட்டத்திட்ட முழுக்கொள்ளளவு வரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படுவதில்லை,சம்பா பயிருக்கு கூட முறையாக நீர் விடாமல் நாற்றங்கால்கள் காய்ந்தன. சோழ கங்கை என அழைக்கப்படும் பொன்னேரி,நாரை ஏரி,வீராணம் ஏரி போன்ற ஏரிகள் தூர் வாரப்படாததாலும்,கரைகள் பலப்படுத்தப்படாததாலும், வடிகால்கள் பராமரிக்கப்படாததாலும் வீராணத்திலிருந்து திறந்து விடப்படும் வெள்ள நீரால் ஒருபோக சம்பா பயிரையும் உழவர்கள் இழந்து நிற்கிறார்கள்.காவிரியில் தமிழக உரிமையை மறுக்கும் கர்நாடகம் வெள்ள வடிநிலமாக தமிழக வேளாண்நிலங்களை மாற்றி வஞ்சிப்பது போல் தமிழக அரசும் வீராணம் உழவர்களை வஞ்சிக்கிறது.

தனது செயல்களால் தமிழக உழவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசே இழப்பை ஈடுகட்டும் பொறுப்பை ஏற்பதே இயற்கை நீதி.ஏதோ இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்டது போலவும் அதை அரசு ஓரளவு ஈடுகட்டுகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறது.இது ஏற்புடையதல்ல.மறுசாகுபடிக்கு தேவையான விதை,உரம்,போன்ற இடுபொருள்களை இருப்பு வைத்து வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவால் உழவர்களுக்கு எப்பயனும் இல்லை.

தமிழக உழவர் முன்னணி எடுத்த கணக்கெடுப்பின் படி நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு குறைந்தப்பட்சம் ரூ.20,500/- செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு பணத்தை செலவழித்துள்ள உழவன் அப்பணம் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி 50 விழுக்காடு இலாபத்துடன் திரும்பக்கிடைத்தால் மட்டுமே அடுத்த சாகுபடிச்செலவையும் குடும்பச்செலவையும் ஈடுகட்ட முடியும்.

தமிழக உழவர் முன்னணி கோரி வருவது போல் ஏக்கர் வாரியாக பயிர்க்காப்பீடு செய்யும் முறையிருந்தால் உழவர்கள் நிவாரணம் கோரி அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை.

ஆகவே தமிழக அரசின் செயல்களால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு 50 விழுக்காடுக்கு மேல் சேதம் இருந்தால் ஏக்கருக்கு ரூ.3200/- வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவை தமிழக உழவர் முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.உடனடியாக ஏக்கருக்கு குறைந்தப்பட்சமாக நெற்பயிருக்கு ரூ.20,000/- வழங்க வேண்டும் எனவும் கோருகிறது.

Monday, December 6, 2010

அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முழு இழப்பீடு தரும்படி கோரிக்கை!



ஓரிரு நாள் தொடர் மழைபெய்தாலே தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பயிர்சேதமும். உயிர்ச்சேதமும். பொருளாதார இழப்பும் சொல்லி மாளாது.



இது தொடர்பாக தமிழக உழவர் முன்னணி நீர் நிலைகளில்,பாசன வாய்க்கால்களில்,வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும்படி பலமுறை மனு அனுப்பியும் போராட்டங்கள் நடத்தியும் வந்திருக்கின்றது.சிறந்த முறையில் பராமரிக்கப்படும் அதிகாரவர்க்கத்தையும் காவல் துறையையும் பெற்றிருக்கும் தமிழக அரசு உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

அரசின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் முழ்கி அழகிவிட்டன. சூல்கொண்டு நிற்கும் பயிரும் பதராகப் போவது நிச்சயம்.
மேலும் வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது என்பதன் பெயரால் ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவுக்கு ஏரியில் நீர் தேக்கிவைக்கப்படுகிறது. அதிலிருந்து குறுவை சாகுபடிக்கு காலத்தில் நீர் திறந்துவிடப்படுவதும் இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீராணம் ஏரியில் 40 அடிக்கும் குறைவாக நீர் தேக்கப்படவேண்டும் என்ற உழவர்களது கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. வீராணம் ஏரிக்கு மேற்கே பொழியும் மழைக்கு வடிகாலாக சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இருக்கின்றன. நீர் மேலாண்மையையும். வடிகால் பராமாரிப்பையும் அரசு நிர்வாகம் முறையாக செய்யாததால் ஆண்டு தோறும் பயிர்கள் நீரில் முழ்கி பெருத்த சேதம் அடைகின்றன.
வேளாண்மைக்கு முழுமையாக செலவழித்துவிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் வேளையில் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயிர் சேதமடையும்போது உர்வர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை வார்த்தைகளால் கூற இயலாது.
வீராணத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் முழுவதும் பாதிக்கப்பட்ட திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், நெய்வாசல், கீழவன்னியூர், மேலவன்னியூர், குமராட்சி, மெய்யாத்தூர், தாவத்தாம்பட்டு, புதுபூலாமேடு. சிவாயம். நாஞ்சலூர், வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், பழையநல்லூர், பிள்ளைமுத்தாப்பிள்ளைச்சாவடி, அத்திப்பட்டு, வடக்கு மாங்குடி,தெற்குமாங்குடி,வல்லம்படுகை, பொன்னந்திட்டு. சி.மானம்பாடி. ஆகிய ஊர்களில் உள்ள உழவர்களுக்கு ஏக்கருக்கு ரு: 20.000-? முழு இழப்பீட்டுத்தொகையாக வழங்கும்படி தமிழக உழவர் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில், திருச்சி நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக


சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில்,செயங்கொண்டம்,
திருச்சி சாலை (எண் 227) தேசிய நெடுஞ்சாலை துறையால் இருவழி பாதையாக மாற்றப்பட இருப்பதாக அறிகிறோம்.


சாலை அகலப்படுத்தப்படுவதை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் வரை தற்சமயம் புழக்கத்தில் சாலையின் இருபுறமும் பாசனம் (வடக்கு ராசன் வாய்க்கால்,வெள்ளியங்கால் ஓடை,கான்சாகிப் வாய்க்கால்) மற்றும் வடிகால் வாய்கால்கள் செல்லுகின்றன.

இருவழிசாலை அமைக்கும் பொழுது பாசன்,வடிகால்
வாய்கால்களின் அகலம் பாதிக்கப்படாமல் அமைக்கும்படி கோருகிறோம்.

ஏற்கனவே சிதம்பரம் புறவழிச்சாலையின் தடுப்பாலும்,ஆங்காங்கே உருவாகியுள்ள நகர்களாலும் வெள்ளநீர் வடிவது பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.சாலையின் விரிவு காரணமாக பாசன வடிகால் வாய்க்கால்களின் அகலம் குறைக்கப்பட்டால் சேதத்தின் கடுமை மேலும் அதிகமாகும்.

ஆகவே உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையை விரிவு படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.