Monday, July 22, 2013

உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

இன்று (22.07.2013) சிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் இரா. சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.ஜெயபாலன், குமராட்சி ஒன்றிய செயலாளர் தஙக.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் சிவபுரி வெ.பொன்னுசாமி, பொன்னந்திட்டு அ.மதிவாணன், நாஞ்சலூர் கோ.வெங்கடாசலம், மேலமூங்கிலடி சி.ராஜேந்திரன், பண்ணப்பட்டு மு.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கடந்த ஆண்டு வறட்சியை காரணம் காட்டி கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய காவிரி நீரை கொடுக்காமல் வஞ்சித்தது. இவ்வாண்டு அணைகளில் நீர் இருந்தும் இறுதி தீர்ப்பின் படி ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரை திறந்து விட வில்லை. ஜூலையில் பெய்யும் கன மழையால் அணைகள் உடைந்து விடாமல் இருக்க திறந்து விடப்படும் நீரை கணக்கில் எடுத்துக் கொண்டு மீதம் 10 டி.எம்.சி நீரை கொடுப்பதாக கூறுகிறது. ஆகஸ்ட் மாத நீர் பற்றி பேச்சில்லை. அதாவது தமிழகத்தை வெறும் வடிகாலாக மட்டுமே பயன் படுத்துவதில் கர்நாடகம் உறுதியாக உள்ளது. கர்நாடக அரசின் இச்செயலை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு இறுதி தீர்ப்பின் படி வாரந்தோறும் தர வேண்டிய நீரை முறையான அறிவிப்பு கொடுத்து திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். மாதந்தோறும் பெறப்பட வேண்டிய நீர் அம்மாதத்திலேயே பெறப்பட வேண்டும். அதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு அனைத்து கட்சிகள், உழவர் அமைப்புக்கள் கூட்டத்தை கூட்டி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2.ஏற்கனவே வீராணம் ஏரியில் படகு விடும் திட்டம் உழவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மீண்டும் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கும் திட்டத்தால் ஏரிநீர் மாசுபடும் ஆபத்துள்ளதால் தமிழக அரசு அத்திட்டத்தை கைவிட வேண்டும்.

3. வழங்கப்பட இருக்கும் சென்ற ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையின் விழுக்காட்டை பயிர்க்காப்பீட்டு நிறுவனம் உடனே அறிவிக்க வேண்டும்.

4.வரும் ஆண்டுகளில் உழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும்.

5. சென்ற ஆண்டு உழவர்கள் வாங்கிய கடனுக்காக செலுத்திய பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை(அரசு காப்பீட்டு கட்டணத்தை ஏற்றுக்கொண்டதால்) திருப்பி தரவேண்டும்.

6. கூட்டுறவு பயிர்க்கடன்களின் உச்ச வரம்பை ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சமாக உயர்த்த வேண்டும்.

இத்தீர்மானங்களை நிறைவேற்றித் தரும்படி தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி கோருகிறது.


Tuesday, July 9, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு இன்று (09.07.2013) காலை 10 மணிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்கள்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களின் சிறப்புரை.