Sunday, August 22, 2010

நெல்லே உன் விலை என்ன?



Tuesday, August 17, 2010

உழவர்கள் விழிப்படைய வேண்டும்!!

06/07/2010 ல் விருத்தாசலத்திலும் 12/08/2010 ல் சிதம்பரத்திலும் நடந்த உளுந்து,பயிர் வேளாண்மை தொடர்பான அரசு ஏற்பாடு செய்த விவசாய கருத்தரங்கில் கலந்துக் கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மேட்டூர்,கல்லணை,கீழணை,வீராணம் ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீரை உடனே திறந்து விட கோரினார்களேயன்றி காவிரியில் இடைகாலத் தீர்ப்பின் படி மாதந்தோறும் கர்நாடகத்திடமிருந்து தமிழகம் பெற வேண்டிய நீர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தமிழக உழவர் முன்னணி சார்பில் கலந்துக் கொண்ட செயலர் சி.ஆறுமுகம், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் என்.ஜெயபாலன் மட்டுமே கருத்தரங்கில் காவிரி உரிமை குறித்து புள்ளி விவரங்களுடன் பேசி தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.உழவர்கள் கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் சிந்திக்க வேண்டும்.

Saturday, August 7, 2010

செய்தி: ஒரு கிலோ அரிசி ரூ.100 - அதிர்ச்சித் தகவல்



ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!

(குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வந்த செய்தி...)

கிலோ அரிசி நூறு ரூபாயை ஓரிரு மாதங்களில் எட்டிவிடும். தமிழகத்திலும் பட்டினிச் சாவு நடக்கும்’’என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் விற்கும் நிலையில்,இதை நம்ப முடியாமல், ‘எப்படி?’ என்று கேட்டோம்.

‘‘இந்தாண்டும் குறுவை சாகு படி, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும்.இப்போதைக்குத் தமிழகத்தின் நெல் பற்றாக்குறையை வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியால் சமாளித்து வருகிறோம். விரைவில் ஆந்திராவிலும் பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப் போகிறார்கள். அதையடுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி வரத்து நின்றுவிடும்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.அதையடுத்து, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அரிசி வரத்தும் நின்றுவிடும். தமிழகத்தில் இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தால் தரமான அரிசி கிலோ 50ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமாநில அரிசி வரத்தும் குறைந்தால் அரிசி விலை இரட்டிப்பாகும். ஒரு ரூபாய் அரிசி ஒரு குடும்பத்துக்கு மாதம் முழுவதுக்கும் நிச்சயம் போதாது. அப்படியொரு நிலை வரும்போது,சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்’’என்று நமது அதிர்ச்சியைக் கூட்டினார், கி.வெ.

மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

2007-ல் இறுதித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றுவரை நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலும், தமிழகத்துக்குத் தேவையான நியாயமான நீரைப் பெறுவதிலும் தமிழக அரசு முனைப்புக் காட்டாமல் உள்ளது. இதன் காரணத்தால், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்துவிட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததால் இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை வேளாண் விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘தமிழகம் உணவுத் தற்சார்பை இழந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும். மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழலை நோக்கிப் போகும். பிறகென்ன? பட்டினிச் சாவுகள் அரங்கேறும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார், பாமயன்.






தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ தேவராசன், ‘‘25.8 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் மட்டும்தான் தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. காவிரி நீரைப் பெறாததால் குறைந்தபட்சம் 2.88 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால் இந்தப் பாதிப்பு இரட்டிப்பாகும்.

தொடர் மின்தடையால் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகளிலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதன் காரணங்களால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் உழவர்கள் உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை மறைமுகமாக விவசாயத் தொழிலை கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவரைக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான பெரிய கட்சிகள் எதுவுமே கர்நாடகாவிடம் தமிழகத்துக்கு நியாயமான பங்கு நீரைக் கோரவில்லை.



காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி மன்ற இடைக்கால ஆணை நடைமுறையில் உள்ளதால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும். ஜூலை வரை கர்நாடகம் தரவேண்டிய 64.87 டி.எம்.சி. நீரையும், ஆகஸ்டில் 54.72 டி.எம்.சி. நீரையும், அக்டோபரில் தரவேண்டிய 30.17 டி.எம்.சி. நீரையும் இதுவரை தமிழக அரசு கோரவில்லை என்பதுதான் யதார்த்தம்!

தமிழக ஆளும்கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு,இடைக்கால ஆணையின்படி நீரைப் பெற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தை மிகப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்’’ என்றார்.

லாபம் இல்லை!

கிரியேட் அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை விவசாய நெல் குறித்த கருத்தரங்கத்தில், ‘‘பிற விளைபொருள்களோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் நெல் ஒரு லாபகரமான பயிராக இல்லை. மாற்றுப் பயிர்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1950-ம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76லட்சம் ஏக்கர். தற்போது 54 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. சராசரியாக நெல் சாகுபடி பரப்பளவில் ஏறத்தாழ 22 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறுமுகத்தில் அரிசி விலை!

தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கடந்த 5ஆண்டுகளில் அரிசி விலையேற்றம் எப்படி உள்ளது என்று கேட்டோம்.

‘‘நடுத்தர மக்கள் அதிகமாக வாங்கும் முதல் தர பொன்னி அரிசி 2006-ல் கிலோ 18ரூபாய்க்கும், 2007-ல் இரண்டு ரூபாய் விலையேறி 20 ரூபாய்க்கும், 2008-ல் 22-க்கும், 2009-ல் 28 ரூபாய்க்கும் விற்கபட்டது. இதே அரிசி இந்தாண்டு ஷனவரியில் கிலோவுக்கு பத்து ரூபாய் ஏறி(!) 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டது’’ என்றார் அவர்.

படங்கள்: ம.செந்தில்நாதன், வே.வெற்றிவேல்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், 08.08.2010