Thursday, December 22, 2011

Tuesday, December 6, 2011

Monday, November 28, 2011

1

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட இடுக்கி மாவட்டம் முழுவதையும் தமிழ்நாட்டுடன் இணை தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

உச்சநீதிமன்றம் நியமித்த சார்பற்ற வல்லுநர் குழு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அணை வலுவுடன் உள்ளதாக அறிவித்து அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அணையில் 145அடி தண்ணீர் தேக்குமாறு ஒரு முறைக்கு இரு முறை தீர்ப்பளித்து விட்டது. இத்தீர்ப்பை மீறும் வகையில் முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படை அற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதகு கேரள முயன்று வருகிறது.

தன்னுடைய நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டி கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. “டேம் 999 என்ற திரைப்படமும், முழுஅடைப்பு போராட்டமும் அதன் தொடர்ச்சியாகும். முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழிவழி மாநில சீரமைப்பு நடக்கும் போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது.இன்றும் கூட இடுக்கி மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.

முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறுகின்றன இப்பகுதிகளை பாலை நிலமாக்கும் தீய எண்ணத்துடன் கேரள கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காவிரி,பாலாறு போலவே முல்லைப் பெரியாறு பிரச்சினையும் தமிழக மக்கள் அனைவருக்குமான பிரச்சினையாகும். இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும்.

எனவே தமிழக உழவர்கள் கட்சி வேலிகளை கடந்து இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்போம்!

தென் தமிழகத்தை பாலை நிலமாக்கும்

கேரளாவின் வஞ்சனையை முறியடிப்போம்!

Saturday, October 15, 2011

Sunday, May 8, 2011

காவிரி, பாலாற்றுப்படுகை இயற்கை எரிவளி,பெட்ரோலிய வளங்களை அம்பானி குடும்பம் கைப்பற்றியது


8600 ச.கி.மீ பரப்புள்ள காவிரி-பாலாற்றுப் படுகையை ரிலையன்சு இண்டியா கம்பெனிக்கு தாரை வார்த்துள்ளது இந்திய அரசு.

இப்பகுதியில் அதிக அளவில் இயற்கை எரிவளியும் கச்சா எண்ணெய்யும் இருப்பதைக் கண்டறிந்துள்ள ரிலையன்சு இங்குள்ள பெட்ரோல் வளத்தை எடுப்பதில் ஈடுபடும் உரிமையை 100 விழுக்காடு தன்னிடமே வைத்துள்ளது.

பெட்ரோலிய வளங்கொழிக்கும் தமிழ் மண்ணான இப்பகுதிக்கு துருபாய்-53 என தன் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்கிறது வடஇந்திய அம்பானி நிறுவனம்.

மாடுலர் டைனமிக் டெஸ்டிங் (M.D.T) ட்டிரில் ஸ்டெம் டெஸ்டிங் (D.S.T) போன்ற ஆய்வுகள் பலமுறை செய்ததில் இப்பகுதியில் இயற்கை எரிவளியும், கச்சா எண்ணெய்யும் பெருமளவில் இருப்பது உறுதியானது.

மாடுலர் டைனமிக் டெஸ்டிங் (M.D.T) எனும் ஆய்வு செய்தபோது 37 மில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவளியும் 1100 பாரல் கச்சா எண்ணெய்யும் 56/64 அங்குலம் அளவுள்ள குழாய் மூலம் ஒரு நாளைக்கு கிடைத்தது என்றால் இப்பகுதி பெட்ரோலிய வளத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழக உழவர்கள் காவிரி, பாலாற்று நீரை மட்டும் இழக்கவில்லை, இவ்வாற்றுப் படுகைகளின் பெட்ரோலிய வளத்தையும் இழந்து நிற்கின்றனர்.

தமிழகத்துக்கு தேவையான பெட்ரோலிய பொருட்கள் தமிழ் மண்ணில் கிடைத்தும் புது தில்லியை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் உழவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாய் சிந்திப்போம்! போராடப் புறப்படுவோம்!

Monday, February 28, 2011

உழவர்களை வஞ்சிக்கும் இந்திய அரசின் வரவு-செலவுத்திட்டம் தமிழக உழவர் முன்னணி கண்டனம்

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்வைத்துள்ள 2011-12 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) உழவர்களையும், நுகர்வோரையும் வஞ்சிக்கிற-விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிற திட்டமாகும்.

வேளாண்மை, உணவு, எரிஎண்ணை போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்பட்டுள்ளது.வேளாண் மானியம் சென்ற நிதியாண்டின் திருத்தப்பட்ட மதீப்பீட்டை விட ரூ4000 கோடி குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல்,டீசல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல்-டீசல் மீதான வரிகள் குறைக்கப்படாதது மட்டுமின்றி இவற்றிற்கு அளிக்கப்பட்ட மானியம்

சென்ற ஆண்டை விட ரூ15,000 கோடி குறைக்கபட்டுள்ளது.பெட்ரோல் உற்பத்தி ஆகும் அரபு நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதை யொட்டி உலகச் சந்தையில் எண்ணெய் விலையேற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்நிலையில் இந்திய அரசு இவற்றின் மீதான மானியத்தை குறைப்பது பெட்ரோல்,டீசல் விலையேற்றத்திற்கும் அதனடிப்படையில் எல்லாப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

வேளாண் மானியம் வெட்டப்பட்டுள்ளதால் வேளாண் இடுபொருள்களின் விலைஉயர்ந்து உழவர்கள் கடும் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் பெரும் தொழில் நிறுவனங்கள் மீதான நேரடி வரி விதிப்பு ரூ11,500கோடி குறைக்கப்பட்டுள்ளது.இத்தோடு சேர்த்தால் கடந்த மூன்றாண்டுகளில் 4இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் மக்கள் மீதான மறைமுக வரி ஏறத்தாழ ரூ12,000 கோடி உயர்ந்துள்ளது.இதுவும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.

வேளாண்மையை நவீனப்படுத்த கூடுதல் கடன் வசதி செய்வது என்ற பெயரால் ஒதுக்கப்படும் நிதி உழவர்களை சென்றடைவதில்லை என்பது கடந்த சில ஆண்டுகளாக கண்டுவரும் உண்மை.

எடுத்துக்காட்டாக அரசு வங்கிகள் வேளாண்மை கடன் என்ற தலைப்பில் வழங்கிவரும் கடன்களில் 70 விழுக்காடு டிராக்டர் நிறுவனங்கள், விதை கம்பெனிகள், உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய நாட்டு பெரு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகின்றன என்பது அரசே ஏற்றுக்கொண்ட புள்ளிவிவரம் ஆகும். இப்போது நிதியமைச்சர் ஒதுக்கியுள்ள கூடுதல் நிதியும் உழவர்களுக்கு பயன்படப்போவதில்லை.நவீனபடுத்துதல் என்ற பெயரால் தொழில் நிறுவனங்களுக்கே வழங்கப்பட இருக்கிறது..

உணவு மானியம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. உழவர்களிடம் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து நியாய விலையில் மக்களுக்கு வழங்கும் கடமையிலிருந்து அரசு நழுவி செல்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இந்திய அரசின் உழவர் எதிர்ப்பு , நுகர்வோர் எதிர்ப்பு வரவு செலவுத் திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

வேளாண் மற்றும் உணவு மானியத்தை உயர்த்த வேண்டும் என்றும் 4% வட்டியில் வேளாண்மை கடன் உழவர்களுக்கு வழங்க உறுதியான திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

Friday, January 21, 2011



தவற்றை ஒத்துக்கொள்ளும் நேர்மையும் ,சனநாயக ஒழுக்கமும் விகடன் குழுமம் போன்ற புகழ்வாய்ந்த இதழ்குழுமத்திற்கே இல்லாது போனது.

Tuesday, January 11, 2011

சுற்றறிக்கை 1/11

அன்புள்ள வேளாண் பெருமக்களே!

தமிழக உழவர் முன்னணி சார்பில் இனிய தமிழ்ப்புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.10.1.11 அன்று த.உ.மு யின் செயற்குழு கூட்டம் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.கீழ்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

1.) 3.1.11 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் கிளைகள் உள்ள ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் உழ்வர்கள் கல்ந்துக்கொண்டனர்.நாம் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால் தான் ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு,இடுபொருள் விலையேற்றம்,நம் வாழ்க்கைச் செலவுகளின் கட்டுக்கடங்காத உயர்வு ஆகியவற்றை சமாளிக்க முடியும்; நம் மண்ணையும்,வேளாண்மையையும் காக்க முடியும் என்ற உண்மையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இந்த சிந்தனையை உழவர்களிடையே போதிய அளவு நாம் ஏற்படுத்தவில்லை என்பதையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை காட்டியது.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களும் தம் சொந்த முயற்சியில் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதிலும் புதிய கிளைகள் அமைப்பதிலும் ஒவ்வொரு உறுப்பினரும் ஈடுபட வேண்டும்.

2.) 12.1.11 நாளிட்ட ஜூனியர் விகடன் நம் அமைப்பு போன்ற பெயரை (தமிழ் உழவர் முன்னணி) பயன்படுத்தி இழிவான் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.அதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு மறுப்பறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதை அவர்கள் அடுத்த இதழில் வெளியிடாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.) விளைவித்த நெல்லை விற்க இயலாமல் உழவர்கள் கலங்கி நிற்கின்றனர். விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழக அரசு குடிமைப் பொருள் அங்காடி,மருத்துவமனை ,சிறைச்சாலை,போன்ற தேவைகளுக்காக மத்திய தொகுப்பிலிருந்து (பஞ்சாப்,ஒரிசா அரிசி) அரிசி வாங்கக் கூடாது என்றும் ஆந்திரா,கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்கள் தங்கள் சந்தைக்காடாக தமிழகத்தை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தின் தேவைக்கான நெல்லை தமிழக உழவர்களிடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நம் வற்புறுத்தி வருகிறோம்.தமிழக சந்தையை பாதுகாக்கும் நடவடிக்கையை உடனே எடுக்கும்படி தமிழக அரசை கோருகிறோம்.இக்கருத்தை உழவர்களிடையே நாம் பரப்ப வேண்டும்.

4.)அறுவடை தொடங்கி இருப்பாதால் அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்

5.) நிதி பற்றாக்குறை தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது நம் செயற்பாட்டிற்கு ஏற்ற நிதி வரத்து இல்லை.ஆகவே அவரவர் ஊர்களில் அறுவடை தொடங்கியதும் செயலாளரை தொடர்புக் கொண்டு நிதி திரட்ட வேண்டும்.ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ரூ.100-/ கொடுக்க வேண்டும் என்ற உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் செயல்வடிவம் பெற அனைத்து உறுப்பினர்களும் பணியாற்ற வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சி.ஆறுமுகம்
செயலர்

Saturday, January 8, 2011

ஜூனியர் விகடனின் அவதூறு செய்திக்கு; தமிழக உழவர் முன்னணி மறுப்பு


உதயமாகிறது லெட்டர் பேடு கட்சிகள் உதவுகிறதா அண்ணாமலை யுனிவர்சிட்டி”,என்ற தலைப்பில் 12-01-2011 ஜூனியர் விகடன் இதழில் க.பூபான் என்பவர் எழுதியுள்ள செய்தி எங்களது தமிழக உழவர் முன்னணி குறித்து அடிப்படையற்ற அவதூறுகளைப் பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைகழகத்திற்கு எதிராக சுவரொட்டி பரப்புரை நடத்தி மிரட்டல் விடுத்து சீட்டுகள் பெறும் தரகு வேலையில் ஈடுபடுவதாக சில அமைப்பு பெயர்களை அக்கட்டுரை அடுக்குகிறது.அதில் தமிழ் உழவர் முன்னணிஎன்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

எங்கள் அமைப்பு தமிழக உழவர் முன்னணி.இது கட்சியல்ல,கட்சி சார்பற்ற உழவர் அமைப்பு நாங்கள் லெட்டர் பேடு அமைப்பும் அல்ல.பெருந்திரள் உழவர்களைத் திரட்டி தமிழ்நாட்டு உழவர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்பு.அது மட்டுமின்றி, சிதம்பரத்தில் மட்டும் இருக்கும் அமைப்பல்ல கட்லூர் மாவட்டத்தின் வேறு பல பகுதிகளிலும், விழுப்புரம், தஞ்சை,நாகை,தூத்துக்குடி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு.

எங்கள் அமைப்பின் போராட்ட செய்திகளும்,பொதுக் கூட்ட செய்திகளும், எங்கள் அமைப்பு நிர்வாகிகளின் நேர்காணல்களும் பசுமை விகடனிலும், ஜூனியர் விகடனிலும், தினமணி, தினதந்தி, தினகரன், தினமலர்,மாலைமுரசு உள்ளிட்ட பல்வேறு நாளேடுகளிலும் பல தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன.

அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் வேளாண் புலம் நடத்தும் உழவர் பயிற்சி முகாம்களிலும் ,கருத்தரங்குகளிலும் எங்களது உழவர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன.அதே நேரம் இப்பல்கலைகழகத்தின் வேளாண் புல பேராசிரியை ஒருவர் மான்சாண்டோவின் மரபீனி கத்தரி விதைக்கு இசைவு வழங்கியதில் முக்கிய பங்காற்றிய போது அதனை எதித்து எங்கள் தமிழக உழவர் முன்னணி பரப்புரை-போராட்டங்கள் நடத்தியது.

எந்தக் காலத்திலும்,எந்த இடத்திலும் பதவி,பணத்திற்காக பல்லிளிக்காத நேர்மை உரமிக்க போராட்ட அமைப்பு எங்கள் தமிழக உழவர் முன்னணி. நாங்கள் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சீட்டு வாங்கும் தரகு வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது எந்த அடிப்படையுமற்ற அவதூறு ஆகும். ஊரறிந்த உண்மை இவ்வாறு இருக்க ஜூ.வி செய்தியாளர் பூபானுக்கு மட்டும் இது தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.

ஒரு வேளை எங்கள் அமைப்பின் பெயரின் சாயலில் தமிழ் உழவர் முன்னணிஎன்ற பெயரால் யாராவது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது தமிழக உழவர் முன்னணியிலிருந்து வேறுபட்ட ஒன்று என தெளிவு படுத்தி எழுத வேண்டியது பொறுப்புள்ள செய்தியாளரின் கடமையாகும்.நாங்கள் வெளியிடும் துண்டறிக்கை,சுவரொட்டி,சுவர் விளம்பரம் ஆகியவற்றில் தொடர்பு முகவரி,தொடர்பு எண்கள் ஆகியவை அறிவிக்கப்படுகின்றன.உண்மைச் செய்தியைக் குழப்பமில்லாமல் கொண்டுவருவதில் அக்கறை இருந்தால் எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவது எளிதானசெயலாகும்.

நாங்கள் பெரிதும் மதிக்கும் விகடன் குழும ஏடு ஒன்றிலிருந்து எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளிவந்திருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

இந்த உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கச் செய்தி வெளியிடுமாறு ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்