Monday, November 28, 2011

1

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட இடுக்கி மாவட்டம் முழுவதையும் தமிழ்நாட்டுடன் இணை தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.

உச்சநீதிமன்றம் நியமித்த சார்பற்ற வல்லுநர் குழு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அணை வலுவுடன் உள்ளதாக அறிவித்து அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அணையில் 145அடி தண்ணீர் தேக்குமாறு ஒரு முறைக்கு இரு முறை தீர்ப்பளித்து விட்டது. இத்தீர்ப்பை மீறும் வகையில் முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படை அற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதகு கேரள முயன்று வருகிறது.

தன்னுடைய நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டி கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. “டேம் 999 என்ற திரைப்படமும், முழுஅடைப்பு போராட்டமும் அதன் தொடர்ச்சியாகும். முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழிவழி மாநில சீரமைப்பு நடக்கும் போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது.இன்றும் கூட இடுக்கி மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.

முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறுகின்றன இப்பகுதிகளை பாலை நிலமாக்கும் தீய எண்ணத்துடன் கேரள கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காவிரி,பாலாறு போலவே முல்லைப் பெரியாறு பிரச்சினையும் தமிழக மக்கள் அனைவருக்குமான பிரச்சினையாகும். இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும்.

எனவே தமிழக உழவர்கள் கட்சி வேலிகளை கடந்து இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்போம்!

தென் தமிழகத்தை பாலை நிலமாக்கும்

கேரளாவின் வஞ்சனையை முறியடிப்போம்!