Monday, August 5, 2013

காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு தேவையில்லை என்ற உச்ச நீதி மன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கி.வெங்கட்ராமன் அறிக்கை


தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று (5.8.2013) வெளியிட்டுள்ள அறிக்கை :

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு தொடுத்த வழக்கு 5.8.2013 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தற்போது காவிரியில் தண்னீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் இப்போது அமைக்க தேவை எழவில்லை என்றும் தேவை ஏற்பட்டால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தினை அணுகலாம் என்றும் அறிவித்துவிட்டு வழக்கை 2014 சனவரிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

உச்ச நீதி மன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு உழவர்களுக்கும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இப்போது காவிரியில் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியாத மிகை உபரி நீரே அன்றி நடுவர் மன்றத்தீர்ப்பின்படி கர்நாடகம் திறந்துவிட்ட தண்னீர் அல்ல.

அன்றன்றைக்கு உள்ள பருவ நிலையைப்பார்த்து உச்ச நீதிமன்றம் நிலைப்பாடு மேற்கொள்வது வியப்பளிக்கிறது.

நடுவர் மன்றத்தீர்ப்பின் படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை நிறுவ இந்திய அரசு மறுத்து வருகிறது.  நடுவர் மன்ற தீர்ப்பு  உச்ச நீதி மன்றத்தீர்ப்புக்கு இணையானது. அதனை செயல்படுத்த ஆணையிட வேண்டிய உச்ச நீதிமன்றம் இப்போது தண்ணீர் வருவதை காரணமாக காட்டி தன் கடமையிலிருந்து நழுவுவது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக அரசு இந்நிலைகளை சுட்டிக்காட்டி விரைந்து விசாரணைக்கு நாள் கேட்பதோடு இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:

Post a Comment