Thursday, December 16, 2010

வெள்ளச்சேதம் மத்தியக்குழு வருகை,தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்


வடகிழக்கு பருவமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பயிர்ச்சேதம்,பொருட்சேதம் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அமைச்சர்களும்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தினரும் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர்.பயிர்கள் மூழ்கி கிடந்த போது பார்வையிட்டு பாதிப்பின் அளவை புரிந்துவைத்திருப்பவர்கள் தமிழக அமைச்சர்களும் I.A.S அதிகாரிகளுமே ஆவர்.


இவர்கள் பரிந்துரைப்பதை ஏற்காமல் வெள்ளம் வடிந்து பின் ஏற்பட்ட மழையால் பாதிப்பின் சுவடு மறைந்துவிட்டுள்ள நிலையில் காலங்கடந்து மத்தியக்குழு பார்வையிட வருவதால் எப்பயனும் இல்லை.இது ஒரு தேவையற்ற சடங்கு.



10நாட்களுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்து வெள்ளம் வடிந்ததும் மிச்சம் இருக்கும் பயிரை காப்பாற்றி விடலாம் என்கிற ஆசையில் மீண்டும் உரத்தை போட்டு உழவர்கள் பயிரை பசுமையாக மாற்றி இருக்கிறார்கள்.ஆனால் இப்பயிர்கள் விளைந்தாலும் வழக்கமான மகசூலில் நான்கில் ஒரு பங்குக்கூட கிடைக்காது என்பது வேளாண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும்.
இந்த உண்மை தெரிந்தும் வேறுவழியற்ற உழவன் வயலில் உரத்தைக் கொட்டி இயற்கையோடு போராடுகிறான்.

நாற்சக்கர வாகனங்களில் பவனி வரும் இந்திய அரசு அலுவலர்களுக்கு இது புரியாது,பெரும் பாதிப்பு ஏதும் இல்லை என்றுதான் கூறுவார்கள்.



இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் கூற்றை ஏற்காமல் தனக்கென்று வரிவசூல் செய்யும் மண் இல்லாத மத்திய அரசு ஒரு சில அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்வதென்பது தமிழக மக்களையே அவமதிக்கும் செயலாகும்.பிரிட்டிஷ் ஆட்சியின் அணுகுமுறையையே இந்திய அரசும் கடைப்பிடிக்கிறது.இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.


தமிழக உழவர்கள் மத்தியக்குழுவை புறக்கணிக்க வேண்டும்.தமிழக அரசு கொடுக்கும் அறிக்கையை ஏற்று பணமளிக்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment