Monday, September 10, 2012


அனுப்புதல்:   சி.ஆறுமுகம்,
              கடலூர் மாவட்டச் செயலர்,
              தமிழக உழவர் முன்னணி
              683/3 சிங்காரவேலர் தெரு,
              சிவஜோதி நகர், சிதம்பரம்.608001

பெறுதல்:     மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
              செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
              சென்னை. 600009

அம்மையீர்!
              பொருள்: காவிரி நீரைப் பெற கர்நாடகத்தின் பாதைகளை மூடுதல்- தொடர்பாக

              ஏற்கெனவே கர்நாடக அரசு நமக்குரிய காவிரி நீரைத் தடுத்து ஒரு பொருளாதார தடையை தமிழகத்தின் மீது விதித்திருக்கிறது. தமிழக அரசு எதிர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சம்பா சாகுபடியை நேரடி விதைப்பு மூலமும், சமுதாய நாற்றங்கால் மூலமும் மேற்கொள்ளும் படி கூறுவது காவிரி உரிமையை இழக்கும் செயலாகும். இது காவிரிப் பாசனப் பகுதியை பாலை நிலமாக்கும்.

              காவிரி நீரில் ஒரு சொட்டுக்கூட கொடுக்க மாட்டோம் என கொக்கரிக்கும் கர்நாடகத்திற்கு துணைப் போகும் முடிவாகவே இவ்வறிவிப்புகள் உள்ளன. தமிழகத்திற்கு ‘காவிரி நீர் தேவையே இல்லைஎன கர்நாடகம் நீதிமன்றத்தில் கூற வழிவகை செய்யவே தமிழக அரசின் இச்செயல்பாடு உதவும்.

              தமிழக அரசே கூட காவிரி நீரை திறந்து விட கர்நாடகம் மறுப்பது, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விரோதமானது என அறிவித்துள்ளது. நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் சட்டபடி நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தீர்ப்பு. ஆனால் கர்நாடக அரசு சட்டத்தை மீறி செயல்படும் அரசாக இருக்கிறது. இந்திய அரசும் இச்சட்ட மீறலுக்கு துணைப் போகிறது.

ஆகவே சட்டப்படி தரவேண்டிய நீரை மறுத்து தமிழகத்தின் மீது ஒரு பொருளாதார தடையையும் சட்ட மீறலையும் நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும் கர்நாடகத்திற்கு செல்லும் பாதைகளை மூடி, தமிழக அரசு ஒரு பொருளாதார தடையை விதிப்பதில் தவறொன்றுமில்லை. அதே போல் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

       இதை விடுத்து நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதால் காவிரியில் நீர் வரப் போவதில்லை.

       எனவே தமிழக அரசு சம்பா சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய புதிய உத்திகள் குறித்து உழவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை கைவிட்டு காவிரி நீரைப்பெற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தமிழக உழவர் முன்னணி கோருகிறது.
இப்படிக்கு

0 கருத்துகள்:

Post a Comment