Sunday, July 15, 2012

சில்லரை வணிகத்தில் பெருநிறுவனங்களின் முதலீடு உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றும்!


சில்லரை வணிகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்க இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

அண்மையில் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கெளசிக்பாசு சில்லரை வணிகத்தில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் மாநிலங்களை ஏற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் தன் முயற்சியை தொடங்கவுள்ளார்.

இந்திய அரசும், பெருநிறுவனங்களின் ஆதரவாளர்களும் சில்லரை வணிகத்தில் பெருநிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் உழவர் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர்கள் தொழிற்மயமான வெளிநாடுகளுக்கும் தமது உற்பத்தி பொருளை ஏற்றுமதி செய்யலாம்;உற்பத்தியாளர்களுக்கு இலாபமான விலை கிடைக்கும்; நாட்டின் பணவீக்கம் குறையும்; நுகர்வோருக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர்.

இது உண்மை இல்லை.

சங்கிலித் தொடரான பெரும் வணிகநிறுவனங்களின் ஆதிக்கம், விநியோகத்தில் நிலைப்பெற்ற பிறகு அவர்கள் உற்பத்தியாளர்களுக்கு கட்டளையிடும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர். தொடர் கடைகளை உடைய நிறுவனங்கள் பெரும் பண்ணை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் புறகணிக்கப்படுகின்றனர். சிறு உடைமையாளர்களான தமிழகத்து நில உரிமையாளர்களின் கதி அதோகதிதான்.

இன்று பெரும் சில்லரை வணிக நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கினால் மட்டுமே இலாபத்தை தக்க வைத்து கொள்ளவும். தரத்தைக்காத்துக் கொள்ளவும் முடியும். இப்போட்டியால் உற்பத்தியாளர்கள் குறைந்த விலைக்காக தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; வேறு வழியில்லை.

27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் மார்ச் 2007-லேயே நிறைவேற்றிய தீர்மானம் சில்லரை வணிகத்தில் பெரும் நிறுவனங்கள் நுழைந்ததால் உழவர்கள் உற்பத்தியை கைவிட்டு உள்ளனர் என கூறுகிறது. (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உழவர்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்குகின்றன. அவ்வுழவர்களுக்கே இந்நிலை என்றால் தமிழக உழவர்களின் நிலை என்னவாகும்?)

சில்லரை வணிகத்தில் பெரு நிறுவனங்களை அனுமதித்தால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை கைவிட்டு வெளியேற நேரிடும் என்ற நிலையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பது உழவர்களையும் சிறு உற்பத்தியாளர்களையும் ஏய்க்கும் செயலாகும்.

அவ்வாறே எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் கொடுக்கும் ஒரு ரூபாயில் 70லிருந்து 80 காசுகள் வரை பெறுகிறார்கள். சில்லரை வணிகத்தில் பெரும் நிறுவனங்கள் கோலோச்சும் அமெரிக்காவில் 1996-இல் நுகர்வோர் கொடுக்கும் தொகையில் 52% பெற்ற உற்பத்தியாளர்கள் 2009-ல் 38% மட்டுமே பெற்றனர். பிரிட்டனில் இது 56%லிருந்து 38%ஆக குறைந்துள்ளது. ஆக உற்பத்தியாளர்களுக்கு இலாபமான விலை கிடைக்கும் என்ற கூற்றும் பொய்யானது.

நாட்டின் பணவீக்கம் குறையும் என்றால் சில்லரை வணிகத்தில் பெரு நிறுவனங்களை அனுமதித்துள்ள பிரிட்டன், பிரேசில், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் பணவீக்கம் குறைந்திருக்க வேண்டும். கிடைக்கும் புள்ளிவிவரங்கள் வேறு கதையைச் சொல்கின்றன. எடுத்துக்காட்டாக பிரிட்டனில் 2011-ல் கடைசி காலாண்டில் பணவீக்கம் 5.5% லிருந்து 6.3%ஆக உயர்ந்தது. 83% பெருநிறுவன்ங்களால் நிர்வகிக்கப்படும் சில்லரை வணிகத்தைப் பெற்றிருக்கும் அமெரிக்காவில் பணவீக்கத்தை குறைப்பது எளிதான காரியமாக இல்லை.

சில்லரை வணிகத்தில் உள்ள பெரும் நிறுவனங்கள் தங்களின் வாங்கும் சக்தி வலிமையால் உற்பத்தியாளர்களின் விலையை அவர்களால் தாங்க முடியாத அளவுக்கு குறைக்கின்றன; நியாயமற்ற கட்டுப்பாடுகளை சுமத்துகின்றன; நுகர்வோருக்கு 5 மடங்கு விலை ஏறியிருப்பினும் உழவர்களின் வருமானம் வீழ்ந்துள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கிடைத்து வந்த வருவாயில் 50%க்கு மேல் குறைந்துள்ளது. பெருநிறுவனங்கள் நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையே நின்றுகொண்டு இருவரையும் ஏய்க்கின்றன. எதிர்காலத்தில் நுகர்வோர் உணவுப்பொருட்களின் பன்முகத்தன்மையையும் இழக்க நேரிடும்.

கடைசியாக அமெரிக்க நிறுவனமான வால்-மார்ட் அமெரிக்க மக்களுக்கு அளித்துள்ள துயரத்தின் சிறு தகவல்.

குடும்பத்தால் நடத்தப்பட்ட 60,000 சில்லரை வணிக கடைகள் 1992க்கும் 2007க்கும் இடையில் மூடப்பட்டன.

எக்கனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட்-ன்படி வால்-மார்ட்க்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வணிகத்தால் 133,000 உற்பத்தி தொழில் சார்ந்த வேலைகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளனர். தன் சொந்த மக்களுக்கு வால்-மார்ட் வழங்கிய பரிசு இது.

சில்லரை வணிகத்தில் பன்னாட்டு, இந்நாட்டு பெரும் நிறுவனங்கள் நுழைவதை தமிழக உழவர்கள் தடுத்து நிறுத்த போராட வேண்டும். போராடும் பிற மக்களோடும் இணைய வேண்டும். புதியதாய் சிந்திப்போம், போராடுவோம்.

அன்புடன்,
                                                                        
[மா.கோ.தேவராசன்]
ஒருங்கிணைப்பாளர்

0 கருத்துகள்:

Post a Comment