Sunday, June 17, 2012

தமிழக உழவர் முன்னணியின் 11 ஆம் தொடக்க விழா கூட்டத் தீர்மானங்கள்


பதினோராம் ஆண்டு தொடக்க விழா

கூட்டத் தீர்மானங்கள்

1.தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக்க வேண்டும்

இந்தியா முழுவதும் ஒரே சந்தையாக இருப்பதை மாற்றி தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வேளாண் மண்டல பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் வேளாண் பிரதிநிதிகளையும், உரிய வல்லுநர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஆணையம் கீழ்காணும் பணிகளை நிறைவேற்றும் சட்ட அதிகாரம் பெற்றிருக்கும்.

1.தமிழக உழவர்களின் வாழ்க்கைச் செலவை கணக்கில் கொண்டு இரண்டாண்டிற்கு ஒருமுறை வேளாண் விளைப்பொருள்களுக்கு இலாபமான விலை நிர்ணயம் செய்யும்

2.சந்தையை ஒழுங்குபடுத்தி தமிழ்நாட்டு மக்களின் தேவைகேற்ப வேளாண் விளைப்பொருட்களின் உற்பத்தியை கண்காணித்து அதற்குத் தக்கவாறு வெளி இடங்களிலிருந்து தமிழகச் சந்தைக்குள் வேளாண் விளை பொருள்கள் வருவதை வரன்முறைப்படுத்தும். தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி,இறக்குமதி செய்ய வேண்டிய விளைபொருட்களையும் அவற்றின் அளவையும் தீர்மானிக்கும்
      
       மேற்கண்டவாறு தனி வேளாண் மண்டலம் அமைக்க ஆனையம் அமைத்து அதிகாரம் வழங்க தேவையான சட்டங்களை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது. இலக்கை அடைந்திட போராட வருமாறு தமிழக உழவர்களை தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.





2.வேளாண்மையைக் காக்க நெய்வேலி மின்சாரம்

மின்வெட்டினால் தமிழகத்தின் அனைத்து பிரிவினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் மக்களின் இழப்பு மிக அதிகம்.

மின்வெட்டினால் முன் குறுவை சாகுபடியை உழவர்கள் இழந்துள்ளனர்.இக்கடுமையான மின்வெட்டிற்கான காரணத்தை தமிழக அரசு கூறவில்லை.

இந்திய அரசின் தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையால் 1990-லிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியில் ஈடுபடவில்லை. இன்று தனியார்மய கொள்ளைக்கு ஈடுகொடுக்க இயலாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் தத்தளிக்கிறது.

இவ்வுண்மையை மறைத்து வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வர போதிய வழித்தடங்கள் இல்லை என தமிழக அரசு கூறுகிறது. இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் முழுவதையும் கேட்கும் தமிழக அரசு நமது ஆற்றுநீர் உரிமையை மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு கேட்டு பெறு என்ற கோரிக்கைக் குறித்து அமைதி காக்கிறது.

தமிழ்நாடு மின்பற்றாகுறை மாநிலமல்ல. அண்டை மாநிலங்களுக்கு அள்ளி கொடுப்பதாலும் தனியார் துறையினரிடம் போடப்பட்ட தீங்கான ஒப்பந்தங்களாலுமே தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கிறது.

ஆகவே தமிழக அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் கேட்டுப் பெற வேண்டும் என்றும். மின்சாரம் தரமறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழக அரசே ஏற்க வேண்டும் எனவும் தமிழக உழவர் முன்னணியின் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. நெய்வேலி மின்சாரம் முழுவதையும் பெற தொடர் போராட்டங்களுக்கு தயாராகுமாறு தமிழக உழவர்களை தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.



3.காவிரி சிக்கல்
காலவரம்பிட்டு புதிய நடுவர் மன்றம் கோர வேண்டும்

       காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதிதீர்ப்பு தமிழகத்திற்கு பேரிழப்பை உண்டாக்கியுள்ளது. இடைக்காலத்தீர்ப்பில் 205 டி.எம்.சி நீரைப் பெற்ற தமிழகம் இறுதிதீர்ப்பின் படி 192 டி.எம்.சி நீரை மட்டுமே பெறும். தமிழகத்தை வஞ்சித்துள்ள இறுதிதீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி இந்திய அரசை தமிழக அரசு கோருவதை தமிழக உழவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட தொடர்புடைய மாநிலங்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

நடுவர் மன்றம் தமிழகத்தை வஞ்சித்துள்ளது.ஆகவே தமிழக அரசு நடுவர்மன்றத்தின் வசம் உள்ள புள்ளி விவரங்களையும் வழக்கு விவரங்களையும் பயன்படுத்திக் கொண்டு ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கும் வகையில் கால வரம்பிட்டு புதிய நடுவர் மன்றம் அமைக்க ஆணையிடுமாறு உச்சநீதிமன்றத்தை கோர வேண்டும்.

கிருஷ்ணா ஆற்றுநீர் சிக்கலில் புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை முன்னுதாரணமாக கொள்ளலாம்.

புதிய நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கும் வரை 25.06.1991-ல் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி 205-டி.எம்.சி நீரை மாதந்தோறும் வழங்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடுமாறு உச்சநீதிமன்றத்தில் கோர வேண்டும்.

சட்டப்படி நீரை கொடுக்க மறுக்கும் கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி, கல்பாக்கம் மின்சாரம் முழுவதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். கொள்ளேகாலம், கோலார் தங்கவயல் போன்ற பழைய தமிழக பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரவேண்டும்.

சட்டபடியான தனது கடமையை நிறைவேற்ற தவறிய இந்திய அரசு தமிழகத்திலுள்ள நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுக்ககூடாது என்று தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். தமிழக உழவர்களும் அத்திசையில் போராட வருமாறு தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.


4.முல்லைப் பெரியாறு அணை சிக்கல்- இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

எத்தனை குழுக்கள் அமைத்தாலும் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் அவற்றை ஏற்காமல் முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதில் மலையாளிகள் கட்சிசார்பற்று அனைவரும் உறுதியாக செயல்படுகின்றனர்.

அண்மையில் நீதியரசர் ஆனந்த் குழு அளித்த தீர்ப்பையும் ஏற்க மலையாளிகள் மறுக்கின்றனர். எனவே உடனடியாக கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மூடி பொருளாதார தடையை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

இச்சிக்கல் முழுவதுமாக நீங்க பெரும்பான்மை தமிழர்கள் வாழும் இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் சேர்க்கும்படி இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக உழவர்களும் இக்கோரிக்கையை வென்றிட தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க மறுக்கும் இந்திய அரசை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு இந்திய அரசுக்கு செலுத்தும் வரிகளை கொடுக்காமல் நிறுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறது.


5.வேளாண்மையைக் காக்க உழவர் வருவாய் ஆணையம் அமை

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஏராளமான மானியங்கள் வழங்கித்தான் உழவுத் தொழிலை தூக்கி நிறுத்துகின்றன. இம்மானியங்களால்தான் தொழில் வளநாடுகளின் வேளாண் விளைப்பொருட்கள் உலகச் சந்தையை ஆக்கிரமிக்க முடிகிறது. உழவுத் தொழிலும் இலாபமாக நடக்கிறது.

எடுத்துக்காட்டாக அமெரிக்க பருத்தி உற்பத்தியாளர்கள் 300 கோடி டாலர்(16 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்புள்ள பருத்தியை விளைவித்து கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக 390 கோடி டாலர்(21,450 கோடி ரூபாய்) வேளாண் மானியமாகப் பெறுகிறார்கள். அதாவது தங்கள் உற்பத்தியின் சந்தை விலையை விட இவர்கள் பெறுகிற மானியம் கூடுதலானது. அதற்குமேல் இவர்களது விளைப்பொருட்களை விற்று கிடைக்கிற தொகை வேறு.

இதே அடிப்படையில் தான் தமிழகத்திலும் உழவர் வருவாய் ஆணையம் அமைக்க கோருகிறோம்.

தமிழ்நாட்டின் சராசரி நிலவுடைமை 2 ஏக்கர்தான். 15 ஏக்கருக்கு கீழ் நிலம் உள்ளவர்கள் தான் இங்கு பெரும்பாலோர் மேலை நாட்டினர் போல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உடைமையாக பெற்றவர்கள் அல்ல.

ஆகவே தான் உழவர் வருவாய் ஆணையம் அமைத்து உழவர்களுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.12000/-மும் உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ12000/மும் அரசு நேரடியாக வருவாய் வழங்க வேண்டும் என கோருகிறோம்.

நாம் கோரும் நேரடி வருவாய் வழங்க தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 27ஆயிரத்து 840 கோடி தேவைப்படக்கூடும். தமிழகத்திலுள்ள 1கோடியே 30 இலட்சம் வேளாண்சார் மக்கள் இதனால் பயன்பெறுவர்.

இந்திய அரசும்,தமிழக அரசும் சேர்ந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பல்வேறு வகைகளில் மானியமாக வழங்கி வருகின்றன.

இவற்றை ஒப்பிட உழவர்களுக்கும்,உழவுத்தொழிலாளர்களுக்கும் நாம் கோரும் நேரடி வருவாய் மிக எளியத் தொகையே.

இவ்வாறு நேரடி வருவாய் வழங்குவதை தீர்மானிக்க உழவர் வருவாய் ஆணையம் அமைக்க வேண்டுமென தமிழக உழவர் முன்னணி இக்கூட்டத்தின் வாயிலாக கோருகிறது.

0 கருத்துகள்:

Post a Comment