Friday, December 31, 2010

இருமடங்காகும் தமிழக உழவர்களின் தற்கொலை

2009-ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் தமிழக உழவர்களின் தற்கொலைகள்.


கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் உழவர்களின் தற்கொலைச் சாவுகள் குறைந்துவரும் வேளையில் 2009-ஆம் ஆண்டில் தமிழக உழவர்களின் தற்கொலை எண்ணிக்கை 512-லிருந்து 1060 ஆக உயர்ந்துள்ளது.அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அவலம்.(இந்து நாளிதழ் 28.12.10)
தமிழக உழவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருத்தல் ,நீர் இறைவைகளுக்கு இலவச மின்சாரம் தருதல்,ஏறக்குறைய நிலவரி இல்லை என்ற நிலை இருப்பினும் உழவர்களின் தற்கொலைகள் மட்டும் குறையவில்லை.

ஆற்றுநீர் உரிமையை நிலைநாட்ட அக்கறை அற்ற தமிழக ஆட்சிகள்.தமிழகத்தை வஞ்சிக்கும் தில்லி ஆட்சி.பருவமழை சீற்றத்தின் மடியில் தமிழக உழவர்கள்;பாசன வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி,பராமரித்து,முறையான நீர் மேலாண்மை செய்யாத அரசுத்துறைகள்;இதனால் ஓரிரு நாள் மழையாலேயே வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்;பயிர்கள் சேதமடையும் உழவர்களுக்கு பயன் தராத காப்பீட்டு முறை;ஆள் பற்றாக்குறை;உயரும் உற்பத்தி செலவுகள் இவற்றையெல்லாம் மீறி விளையும் விளைச்சலுக்கும் இலாபமற்ற விலை.விளைவு மேலும் மேலும் உழவன் கடனாளியாகிறான்.

ஊருக்கு உணவளிக்கும் உழவன் டிராக்டர் போன்ற உழுவை இயந்திரங்கள் வாங்க கடனளிக்க கூட்டுறவு வங்கிகளும்,அரசுத்துறை வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன.இதனால் அதிகவட்டிக்கு தனியார்துறை வங்கிகளில் கடன்பெற வேண்டிய கட்டாயம்.

இப்படி எல்லா முனைகளிலும் தாக்கப்படும் தமிழக உழவர்கள் விழித்தெழிந்து போராட வேண்டும்;வேளாண்மக்கள் வாழப்பிறந்தவர்கள்:வாழ்விப்பவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் --குறள்--உழவு
------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

Post a Comment