Tuesday, December 14, 2010

வெள்ள நிவாரணம் தமிழக அரசுக்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம்


ஓரிரு நாள் மழையால் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதங்களுக்கு இயற்கையின் எதிர்பாராத சீற்றம் முதன்மைக் காரணமல்ல.தமிழக அரசின் கொள்கை முடிவுகளும்,நீர் மேலாண்மையிலும் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசு காட்டிய அலட்சியமுமே காரணம்.

கர்நாடகத்திற்கு பொருளாதார தடை விதித்து அரசியல் நெருக்கடி கொடுத்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன்-12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால் ஆண்டுதோறும் ஏற்படும் சேதத்தின் அளவு குறைந்திருக்கும்.

அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் துனையுடன் தான் நீர்நிலைகள், வடிகால்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. புறவழிச்சாலைகளும், மேம்பாலங்களும், புதியகுடியிருப்புகளும் கட்டப்படும் போது அடைக்கப்படுவது வாய்கால்களே.ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயலாவதில்லை.

உழவர்களுக்கு உரிமையான வீராணம் ஏரி சென்னை குடிநீர் வடிகால் வாரிய பொறுப்புக்கு சென்றுவிட்டதால் ஏரியில் ஆண்டு முழுவதும் கிட்டத்திட்ட முழுக்கொள்ளளவு வரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படுவதில்லை,சம்பா பயிருக்கு கூட முறையாக நீர் விடாமல் நாற்றங்கால்கள் காய்ந்தன. சோழ கங்கை என அழைக்கப்படும் பொன்னேரி,நாரை ஏரி,வீராணம் ஏரி போன்ற ஏரிகள் தூர் வாரப்படாததாலும்,கரைகள் பலப்படுத்தப்படாததாலும், வடிகால்கள் பராமரிக்கப்படாததாலும் வீராணத்திலிருந்து திறந்து விடப்படும் வெள்ள நீரால் ஒருபோக சம்பா பயிரையும் உழவர்கள் இழந்து நிற்கிறார்கள்.காவிரியில் தமிழக உரிமையை மறுக்கும் கர்நாடகம் வெள்ள வடிநிலமாக தமிழக வேளாண்நிலங்களை மாற்றி வஞ்சிப்பது போல் தமிழக அரசும் வீராணம் உழவர்களை வஞ்சிக்கிறது.

தனது செயல்களால் தமிழக உழவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசே இழப்பை ஈடுகட்டும் பொறுப்பை ஏற்பதே இயற்கை நீதி.ஏதோ இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்டது போலவும் அதை அரசு ஓரளவு ஈடுகட்டுகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறது.இது ஏற்புடையதல்ல.மறுசாகுபடிக்கு தேவையான விதை,உரம்,போன்ற இடுபொருள்களை இருப்பு வைத்து வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவால் உழவர்களுக்கு எப்பயனும் இல்லை.

தமிழக உழவர் முன்னணி எடுத்த கணக்கெடுப்பின் படி நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு குறைந்தப்பட்சம் ரூ.20,500/- செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு பணத்தை செலவழித்துள்ள உழவன் அப்பணம் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி 50 விழுக்காடு இலாபத்துடன் திரும்பக்கிடைத்தால் மட்டுமே அடுத்த சாகுபடிச்செலவையும் குடும்பச்செலவையும் ஈடுகட்ட முடியும்.

தமிழக உழவர் முன்னணி கோரி வருவது போல் ஏக்கர் வாரியாக பயிர்க்காப்பீடு செய்யும் முறையிருந்தால் உழவர்கள் நிவாரணம் கோரி அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை.

ஆகவே தமிழக அரசின் செயல்களால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு 50 விழுக்காடுக்கு மேல் சேதம் இருந்தால் ஏக்கருக்கு ரூ.3200/- வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவை தமிழக உழவர் முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.உடனடியாக ஏக்கருக்கு குறைந்தப்பட்சமாக நெற்பயிருக்கு ரூ.20,000/- வழங்க வேண்டும் எனவும் கோருகிறது.

0 கருத்துகள்:

Post a Comment