Monday, December 6, 2010

அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முழு இழப்பீடு தரும்படி கோரிக்கை!



ஓரிரு நாள் தொடர் மழைபெய்தாலே தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பயிர்சேதமும். உயிர்ச்சேதமும். பொருளாதார இழப்பும் சொல்லி மாளாது.



இது தொடர்பாக தமிழக உழவர் முன்னணி நீர் நிலைகளில்,பாசன வாய்க்கால்களில்,வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும்படி பலமுறை மனு அனுப்பியும் போராட்டங்கள் நடத்தியும் வந்திருக்கின்றது.சிறந்த முறையில் பராமரிக்கப்படும் அதிகாரவர்க்கத்தையும் காவல் துறையையும் பெற்றிருக்கும் தமிழக அரசு உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

அரசின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் முழ்கி அழகிவிட்டன. சூல்கொண்டு நிற்கும் பயிரும் பதராகப் போவது நிச்சயம்.
மேலும் வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது என்பதன் பெயரால் ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவுக்கு ஏரியில் நீர் தேக்கிவைக்கப்படுகிறது. அதிலிருந்து குறுவை சாகுபடிக்கு காலத்தில் நீர் திறந்துவிடப்படுவதும் இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீராணம் ஏரியில் 40 அடிக்கும் குறைவாக நீர் தேக்கப்படவேண்டும் என்ற உழவர்களது கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. வீராணம் ஏரிக்கு மேற்கே பொழியும் மழைக்கு வடிகாலாக சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இருக்கின்றன. நீர் மேலாண்மையையும். வடிகால் பராமாரிப்பையும் அரசு நிர்வாகம் முறையாக செய்யாததால் ஆண்டு தோறும் பயிர்கள் நீரில் முழ்கி பெருத்த சேதம் அடைகின்றன.
வேளாண்மைக்கு முழுமையாக செலவழித்துவிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் வேளையில் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயிர் சேதமடையும்போது உர்வர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை வார்த்தைகளால் கூற இயலாது.
வீராணத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் முழுவதும் பாதிக்கப்பட்ட திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், நெய்வாசல், கீழவன்னியூர், மேலவன்னியூர், குமராட்சி, மெய்யாத்தூர், தாவத்தாம்பட்டு, புதுபூலாமேடு. சிவாயம். நாஞ்சலூர், வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், பழையநல்லூர், பிள்ளைமுத்தாப்பிள்ளைச்சாவடி, அத்திப்பட்டு, வடக்கு மாங்குடி,தெற்குமாங்குடி,வல்லம்படுகை, பொன்னந்திட்டு. சி.மானம்பாடி. ஆகிய ஊர்களில் உள்ள உழவர்களுக்கு ஏக்கருக்கு ரு: 20.000-? முழு இழப்பீட்டுத்தொகையாக வழங்கும்படி தமிழக உழவர் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

0 கருத்துகள்:

Post a Comment