கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தி,பொருளாதார தடை விதித்து காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பின் படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறும் நீரைப்பெற்று ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஆற்றல் அற்ற தமிழக அரசுகள்;நமக்குரிய காவிரிநீரை போராடி பெற வேண்டும் என்ற அக்கறை இல்லாத உழவர்கள்; தடுக்க இயலாமல் காவிரியில் வழிந்துவரும் நீரைக் கொண்டு பருவம் தவறி பயிரிட்டாலும்,நீர் மேலாண்மையிலும்,வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பதிலும் தமிழக அரசுகள் காட்டும் அலட்சியத்தால் ஓரிரு நாள் மழையாலேயே ஏற்படும் பயிர்சேதம்; பயிர் சேதமடையும் உழவர்களுக்கு பயன்தராத காப்பீட்டு முறை; இவற்றையெல்லாம் மீறி விளையும் வேளாண் பொருட்களுக்கு இலாபமற்ற விலை; இதனால் நிலத்தை விற்றுவிட்டு வேளாண்மையை விட்டு வெளியேறினால் போதும் என்ற பரிதாப நிலையில் வேளாண் குடும்பங்கள்; இம்மண்ணையும் இழந்தபின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கசப்பான கேள்விக்கு விடை அறிய விரும்பாத வேளாண் மக்கள்,இச்சூழலில் தான் தமிழக வேளாண்மையையும் மண்ணையும் காக்கும் உறுதியுடன் தமிழக உழவர் முன்னணி போராடி வருகிறது.
நமது அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 19.12.10 அன்று தலைவர்.கோ.சிவராமன் தலைமையில் நடந்தது.செயலாளர் சி.ஆறுமுகம் நடந்துள்ள பணிகள் குறித்தும் எதிர்காலப்பணிகள் குறித்தும் விளக்கினார்.
முதலாவதாக த.உ.மு செயற்குழு உறுப்பினர் பொறியாளர் என்.ஜெயபாலன் தான் தொகுத்த புள்ளிவிவரப்படி ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு செலவு ரூ.21850/- என்றும் விளைச்சல் சராசரி 18 குவிண்டால் என்றும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைத்தப்படி 50 விழுக்காடு இலாபம் கிடைக்க வேண்டுமெனில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/- கிடைக்க வேண்டும் என்று விளக்கினார்.
வேளாண்மைக்கு ஆகும் செலவை முறையாக கணக்கிடும் பழக்கம் இல்லாததால் ஒரு ஏக்கருக்கு ரூ.10000/- (அ) 12000/- செலவாவதாக உழவர்களே கூறும் பரிதாப நிலை இருப்பது கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
பெண்ணாடம் பகுதி தமிழக உழவர் முன்னணியினரும் கரும்புக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/- வழங்கப்பட வேண்டும் என்றனர்.இதில் கரும்புசக்கை எரிபொருளாக பயன்படுத்தப்படுவது,கழிவுப்பாகுவிலிருந்து கிடைக்கும் ட்ரை அய்ஸ்,உணவுக்கான ஈஸ்ட்,மருந்துகள்,சிட்ரிக் ஆசிட்,எரிசாராயம் போன்றவற்றால் ஆலைக்கு கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படவில்லை. இவற்றை கணக்கில் கொண்டால் ஆலை டன் ஒன்றுக்கு ரூ.3000/-க்கும் மேல் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிவரும்.ஆனாலும் நமது உடனடி கோரிக்கையாக டன் ஒன்றுக்கு ரூ.3000/- கோருகிறோம்.
ஆகவே ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000/-ம்மும் ஒரு டன் கரும்புக்கு ரூ.3000/-ம்மும் கோரி,வரும் 3.01.2011 அன்று காலை சிதம்பரத்தில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.வேளாண்மை பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால்தான் நம் குடும்ப செலவுகளையும்,கல்வி,மருத்துவம் போன்ற செலவுகளையும் ஈடுகட்ட முடியும்.நம் மண்ணையும் காத்துக்கொள்ள முடியும்.
தமிழக உழவர் முன்னணி கட்சி சார்பற்றது: எந்த தேர்தல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கும் அமைப்பல்ல.வேளாண்மையையும் மண்ணையும் காக்க உறுதியுடன் போராடும் நம் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பெரும் திரளாக உழவர்களைத் திரட்டும் வகையில் பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment