Tuesday, February 12, 2013

தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!


தமிழக உழவர் முன்னணி_(கட்சி சார்பற்றது)
----------------------------------------------------------------
வேளாண் பெருமக்களே!
மீண்டும் ஒரு இந்திய ஆய்வுக் குழு! குழுவில் வரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களிடம்(ஐ.எ.எஸ்) மனு கொடுக்கவும், கண்ணீர் விட்டு கதறவும்,காலில் விழவும் தயங்காத உழவர்கள்! அவர்களை வழி நடத்திச் சென்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் உழவர் தலைவர்கள்!
ஒரு பருவ சாகுபடிக்கு எத்தனை முறை இந்தியக்குழு ஆய்வுக்கு வரும்?காவிரி பாசனப் பகுதியின் நீர் தேவையை கணக்கிட அவர்களிடம் அமைப்புகள் இல்லையா?தார்சாலைகளில் ஓரிரு நாள் வந்து பார்வையிடும் அலுவலர்கள் மூலம்தான் நீர் தேவையை அறிந்துக் கொள்ள முடியுமா? சட்டப்படியான நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வக்கில்லாத இந்திய அரசின் கட்டமைப்புகள் உழவர்களை திசைத் திருப்ப ஆய்வுக் குழுக்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன!
தமிழகத்து ஆற்றுநீர் உரிமையை மீட்க உறுதியாக போராடாத கட்சிகள், விவசாய சங்கங்கள் நிவாரணம் பெற போட்டி போடுகின்ற்ன!
நமது ஆற்றுநீர் உரிமை மீட்கப்பட்டு, வேளாண் விளைப்பொருட்களுக்கு இலாபமான விலைக்கிடைத்து,முறையான பயிர்க்காப்பீடும் இருந்தால் நாம் எவரிடமும் நிவாரணம் கேட்டு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காதே!
இது பற்றி உழவர் நாம் சிந்திப்பதுண்டா?
கர்நாடகத்தின் நீரை நாம் எடுத்துக்கொண்டதுபோல் அங்குள்ள கட்சிகள் போராடுகின்றன! இங்குள்ள கட்சிகளோ நம்மை வறுமையில் தள்ளிவிட்டு நிவாரணம் கேட்டு போராடுகின்றன!
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண்மாலை யவர்...குறள்
உழவுத் தொழில் செய்பவர் பிறரிடம் கையேந்த மாட்டார்! தன்னிடம் கையேந்துபவருக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார்..என்றார் வள்ளுவர்....இவ்வாறு செம்மாந்து வாழ்ந்த வேளாண் மக்களை கையேந்த வைத்துவிட்டது இன்றைய அரசியல்!
நம்மை ஆள்பவர்களும், ஆண்டவர்களும், அவர்களது எடுபிடிகளும்
உழவர்களின் உரிமைக்காக போராடப்போவதில்லை! சரியான அமைப்பை தேர்ந்தெடுத்து, இணைந்து போராட உழவர்களும் பெரும் எண்ணிக்கையில் முன் வரவில்லை.வரும் காலங்களில் ஒரு கையில் சயனைடும், மறுகையில் நிவாரணத்தொகையும் கொண்டுவர போகிறார்கள்! சயனைடை சாப்பிடுங்கள், நிவாரண தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினாலும் உழவர்கள் வரிசையில் நிற்பார்களோ என்னவோ!என்று மிகுந்த துயரத்துடன் நண்பர் ஒருவர் கூறினார்.
தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!

0 கருத்துகள்:

Post a Comment