Tuesday, February 12, 2013

“ஆலமரத்தடி பஞ்சாயத்து போல கூட உச்சநீதிமன்றம் நடந்துகொள்ளவில்லை” காவிரி உரிமை மீட்பு குழு போராட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தராமல் கர்நாடக அரசுக்கு துணைபோகும் உச்ச நீதிமன்றத்தை கண்டித்து தஞ்சையில் 31-01-2013 வியாழன் அன்று மாலை 5 மணிளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், ம.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் திரு வி.விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு தமிழ் நேசன், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் திரு குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, பொறியாளர் திருநாவுக்கரசு (தாளாணமை உழவர் இயக்கம்), செங்கொடிச் செல்வன் (தமிழக விவசாயிகள் சங்கம்), ஜகதீசன் (தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் க செந்திறல் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட்த்தில் பேசிய தோழர் பெ.மணியரசன், “தமிழகத்துக்குரிய காவிரி உரிமையை மீட்பதில் இந்திய அரசு மட்டுமின்றி, உச்சநீதிமன்றமும் கூட துரோகம் செய்கின்றது. 29.01.2013 அன்று நடந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ஒன்றாக கர்நாடக அரசு வழக்கறிஞர் நாரிமன் அவர்களை பார்த்து நாங்கள் ஒரு உத்தரவு போடப் போகிறோம், தமிழகத்துக்கு தண்ணீர் விடலாமா? என்று கேட்டனர். அதற்கு கர்நாடக வழக்கறிஞர் நீங்கள் உத்தரவு போடலாம், அதை எங்கள் மக்கள் ஏற்க வேண்டுமே? நாங்கள் எப்படி கூற முடியும்என்று மறுத்தனர்.

அதன் பிறகு உத்தரவு போட இருந்த நீதிபதிகள் தண்ணீர் திறந்துவிட உத்தரவு போடவில்லை. மாறாக, தமிழக அரசு வழக்கறிஞரிடம், நீங்கள் போய் காவிரி ஆணையத்திடம் முறையிட்டு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது. ஆலமரத்தடி பஞ்சாயத்தில் கூட இப்படிப்பட்ட அவலம் இருக்காது. உச்சநீதிமன்றம் மிக மோசமாக காவிரி உரிமையை மீட்கும் வழக்கில் நடந்து கொண்டு, நீதி மறுக்கிறது.

உச்சநீதிமன்றம் இப்படி நழுவி செல்வதற்கு காரணம் இருக்கிறது. இந்திய அரசு தமிழகத்துக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து காவிரியை மறுக்கிறது என்று அது புரிந்துகொண்டு நடுவண் அரசே இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் கர்நாடகம் வருத்தப்படும்படி கூற வேண்டும் என கருதுவதன் வெளிப்பாடு இது.

இந்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கர்நாடகாவின் முகம் கோணாமல் நடந்துகொள்கிறது. தமிழகத்திற்கு நியாயமான ஏதாவது ஒரு தீர்ப்பை சொன்னால் கூட, அங்கு போராட்டம் நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் எ.பிக்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படிபட்ட போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. எந்த அநீதி இழைத்தாலும் அதை எதிர்த்து எந்த சலனமும் காட்டுவதில்லை தமிழ்நாடு. எனவே தான் அவர்கள் தொடர்ந்து துணிவாக அநீதி இழைக்கின்றனர்.

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் நம்மை கைவிட்ட நிலையில், நாம் என்ன செய்ய செய்யப் போகிறோம்?” என கேள்வியெழுப்பி ஆவேசமாக முடித்தார்.

இந்நிலையில், வரும் 23.02.2013 அன்று காவிரி உரிமையைப் பாதுகாக்காத இந்திய அரசு, காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலிய வளத்தை எடுக்காதே என்ற முழக்கத்துடன், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்திலுள்ள இந்திய அரசு எண்ணெய் நிறுவனம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment