Thursday, February 21, 2013

பிப்ரவரி 23 அன்று திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலத்தில், இந்திய அரசின் பெட்ரோல் கிணறு முற்றுகை..! காவிரி மீட்க கட்சி கடந்து களம் காண்போம் !



தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் இனி என்ன செய்யப் போகிறோம் ?” விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் 06-02-2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டததுக்கு தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் இரா.முரளிதரன் தலைமைத் தாங்கினார். ச.ஞானசேகரன் (மாநில தலைவர், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), எஸ்.என்.சேகர் (நாகை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கம்) கோ.திருநாவுக்கரசு (தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்), எழிலன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), ப.பெரியார் செல்வம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி), எஸ், கார்திகேயன் (மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர இளைஞர் கழகம் ) ப.சுகுமாறன் (மாநில துணைச் செயலாளர், குறளரசுக் கழகம்) த.பன்னீர் செல்வம் ( நகர செயலாளர், ம.தி.மு.க ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக மின்வெட்டும் மின் கட்டண உயர்வும்என்பது குறித்து தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி அவர்களும், “சில்லரை வணிகத்தில் நேரடி அயல் முதலீடுகுறித்து முனைவர் த.செயராமன் அவர்களும் சிறப்புரையாற்றினர். காவிரி நீர் சிக்கல் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தோழர் கி.வெங்கட்ராமன் பேசும்போது காவிரி தீர்ப்பாயம் ஆணையிட்டும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் கூட ஒரு சொட்டு தண்ணீரும் தர முடியாது என கர்நாடகம் கொக்கரிக்கிறது. இந்திய அரசின் வலுவான துணையோடு காவிரி உரிமையை கர்நாடகம் மறுத்துள்ளது. காவிரி சிக்கல் வெறும் தண்ணீர் பிரச்சினையல்ல, அது அடிப்படையில் ஒரு இனப் பிரச்சினை. தமிழினத்தின் மீதான ஆரிய இந்தியத்தின் இனப்பகை அரசியலின் வெளிப்பாடு இது.

இதனை வெறும் தண்ணீர் பகிர்வுப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் இதிலுள்ள இனப்பகையை நாம் புரிந்து கொண்டால் தான் காவிரியை மீட்க முடியும். பொருளாதரத்தின் இன்றியமையாத கூறு நீர் வளம். தமிழகத்தின் உயிர் நீரான காவிரியைத் தடுத்து தமிழகத்தின் மீது கர்நாடகம் பொருளாதார தடையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அதற்குத் துணைபோகிறது.

காவிரி உரிமை மறுக்கும் இந்திய, கர்நாடகம் அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் போராட்டத்தில் தமிழர்கள் இறங்கவேண்டும். தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் பாதைகளை மூடி பொருளாதார தடை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து மட்டும் நாள்தோறும் கர்நாடகத்துக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். இலங்கையில் சிங்கள அரசோடு கை கோத்து தமிழினத்தைக் கொன்று குவித்த இந்திய அரசு, அதே இனப் பகையோடு கர்நாடகத்தோடு இணைந்துகொண்டு தமிழினத்தை வஞ்சிக்கிறது. இந்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றுப் படுகையான திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு (ONGC) நிறுவனம் அமைத்து பெட்ரோல் - எரிவளி வளத்தை கொள்ளையிட்டு வருகிறது. வருகிற பிரவரி 23 அன்று திருவாரூர் - அடியக்க மங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகளை (ONGC) முற்றுகையிடும் போராட்டத்தைகாவிரி உரிமை மீட்புக் குழுஅறிவித்துள்ளது .
காவிரி என்னும் தமிழரின் இயற்கை வளத்தை பாதுகாத்துத் தராத தில்லி அரசே! காவிரி படுகையிலிருந்து கிடைக்கும் மற்றொரு இயற்கை வளமான பெட்ரோலியத்தை எடுக்காதேஎன்ற முழக்கத்தோடு கட்சி வண்ணங்களை கடந்து சாதி வேற்றுமை பாராமல் தமிழர்களாக ஒன்றுபட்டு காவிரியை மீட்க களம் காணவேண்டும்என அப்போது அவர் பேசினார்.

Tuesday, February 12, 2013

தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!


தமிழக உழவர் முன்னணி_(கட்சி சார்பற்றது)
----------------------------------------------------------------
வேளாண் பெருமக்களே!
மீண்டும் ஒரு இந்திய ஆய்வுக் குழு! குழுவில் வரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களிடம்(ஐ.எ.எஸ்) மனு கொடுக்கவும், கண்ணீர் விட்டு கதறவும்,காலில் விழவும் தயங்காத உழவர்கள்! அவர்களை வழி நடத்திச் சென்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் உழவர் தலைவர்கள்!
ஒரு பருவ சாகுபடிக்கு எத்தனை முறை இந்தியக்குழு ஆய்வுக்கு வரும்?காவிரி பாசனப் பகுதியின் நீர் தேவையை கணக்கிட அவர்களிடம் அமைப்புகள் இல்லையா?தார்சாலைகளில் ஓரிரு நாள் வந்து பார்வையிடும் அலுவலர்கள் மூலம்தான் நீர் தேவையை அறிந்துக் கொள்ள முடியுமா? சட்டப்படியான நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வக்கில்லாத இந்திய அரசின் கட்டமைப்புகள் உழவர்களை திசைத் திருப்ப ஆய்வுக் குழுக்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன!
தமிழகத்து ஆற்றுநீர் உரிமையை மீட்க உறுதியாக போராடாத கட்சிகள், விவசாய சங்கங்கள் நிவாரணம் பெற போட்டி போடுகின்ற்ன!
நமது ஆற்றுநீர் உரிமை மீட்கப்பட்டு, வேளாண் விளைப்பொருட்களுக்கு இலாபமான விலைக்கிடைத்து,முறையான பயிர்க்காப்பீடும் இருந்தால் நாம் எவரிடமும் நிவாரணம் கேட்டு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காதே!
இது பற்றி உழவர் நாம் சிந்திப்பதுண்டா?
கர்நாடகத்தின் நீரை நாம் எடுத்துக்கொண்டதுபோல் அங்குள்ள கட்சிகள் போராடுகின்றன! இங்குள்ள கட்சிகளோ நம்மை வறுமையில் தள்ளிவிட்டு நிவாரணம் கேட்டு போராடுகின்றன!
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண்மாலை யவர்...குறள்
உழவுத் தொழில் செய்பவர் பிறரிடம் கையேந்த மாட்டார்! தன்னிடம் கையேந்துபவருக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார்..என்றார் வள்ளுவர்....இவ்வாறு செம்மாந்து வாழ்ந்த வேளாண் மக்களை கையேந்த வைத்துவிட்டது இன்றைய அரசியல்!
நம்மை ஆள்பவர்களும், ஆண்டவர்களும், அவர்களது எடுபிடிகளும்
உழவர்களின் உரிமைக்காக போராடப்போவதில்லை! சரியான அமைப்பை தேர்ந்தெடுத்து, இணைந்து போராட உழவர்களும் பெரும் எண்ணிக்கையில் முன் வரவில்லை.வரும் காலங்களில் ஒரு கையில் சயனைடும், மறுகையில் நிவாரணத்தொகையும் கொண்டுவர போகிறார்கள்! சயனைடை சாப்பிடுங்கள், நிவாரண தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினாலும் உழவர்கள் வரிசையில் நிற்பார்களோ என்னவோ!என்று மிகுந்த துயரத்துடன் நண்பர் ஒருவர் கூறினார்.
தமிழகத்து ஆற்று நீர் உரிமைகளுக்கு கல்லறை கட்டி விட்டது இந்திய அரசு! கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் போராட வீதிக்கு வாருங்கள்!

“ஆலமரத்தடி பஞ்சாயத்து போல கூட உச்சநீதிமன்றம் நடந்துகொள்ளவில்லை” காவிரி உரிமை மீட்பு குழு போராட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தராமல் கர்நாடக அரசுக்கு துணைபோகும் உச்ச நீதிமன்றத்தை கண்டித்து தஞ்சையில் 31-01-2013 வியாழன் அன்று மாலை 5 மணிளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், ம.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் திரு வி.விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு தமிழ் நேசன், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் திரு குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, பொறியாளர் திருநாவுக்கரசு (தாளாணமை உழவர் இயக்கம்), செங்கொடிச் செல்வன் (தமிழக விவசாயிகள் சங்கம்), ஜகதீசன் (தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் க செந்திறல் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட்த்தில் பேசிய தோழர் பெ.மணியரசன், “தமிழகத்துக்குரிய காவிரி உரிமையை மீட்பதில் இந்திய அரசு மட்டுமின்றி, உச்சநீதிமன்றமும் கூட துரோகம் செய்கின்றது. 29.01.2013 அன்று நடந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ஒன்றாக கர்நாடக அரசு வழக்கறிஞர் நாரிமன் அவர்களை பார்த்து நாங்கள் ஒரு உத்தரவு போடப் போகிறோம், தமிழகத்துக்கு தண்ணீர் விடலாமா? என்று கேட்டனர். அதற்கு கர்நாடக வழக்கறிஞர் நீங்கள் உத்தரவு போடலாம், அதை எங்கள் மக்கள் ஏற்க வேண்டுமே? நாங்கள் எப்படி கூற முடியும்என்று மறுத்தனர்.

அதன் பிறகு உத்தரவு போட இருந்த நீதிபதிகள் தண்ணீர் திறந்துவிட உத்தரவு போடவில்லை. மாறாக, தமிழக அரசு வழக்கறிஞரிடம், நீங்கள் போய் காவிரி ஆணையத்திடம் முறையிட்டு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது. ஆலமரத்தடி பஞ்சாயத்தில் கூட இப்படிப்பட்ட அவலம் இருக்காது. உச்சநீதிமன்றம் மிக மோசமாக காவிரி உரிமையை மீட்கும் வழக்கில் நடந்து கொண்டு, நீதி மறுக்கிறது.

உச்சநீதிமன்றம் இப்படி நழுவி செல்வதற்கு காரணம் இருக்கிறது. இந்திய அரசு தமிழகத்துக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து காவிரியை மறுக்கிறது என்று அது புரிந்துகொண்டு நடுவண் அரசே இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் கர்நாடகம் வருத்தப்படும்படி கூற வேண்டும் என கருதுவதன் வெளிப்பாடு இது.

இந்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கர்நாடகாவின் முகம் கோணாமல் நடந்துகொள்கிறது. தமிழகத்திற்கு நியாயமான ஏதாவது ஒரு தீர்ப்பை சொன்னால் கூட, அங்கு போராட்டம் நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் எ.பிக்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படிபட்ட போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. எந்த அநீதி இழைத்தாலும் அதை எதிர்த்து எந்த சலனமும் காட்டுவதில்லை தமிழ்நாடு. எனவே தான் அவர்கள் தொடர்ந்து துணிவாக அநீதி இழைக்கின்றனர்.

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் நம்மை கைவிட்ட நிலையில், நாம் என்ன செய்ய செய்யப் போகிறோம்?” என கேள்வியெழுப்பி ஆவேசமாக முடித்தார்.

இந்நிலையில், வரும் 23.02.2013 அன்று காவிரி உரிமையைப் பாதுகாக்காத இந்திய அரசு, காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலிய வளத்தை எடுக்காதே என்ற முழக்கத்துடன், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்திலுள்ள இந்திய அரசு எண்ணெய் நிறுவனம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.