Thursday, January 10, 2013

வீராணம் ஏரி தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்ட அறிவிப்பு! அதிகாரிகள் பேச்சுவார்த்தை ! தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை.


புதிய வீராணம் திட்டம் “ உபரி நீரை எடுக்கும் திட்டமல்ல : உள்ள நீரையும் உறிஞ்சும் திட்டம் என்றும் வீராணம் ஏரியை சிதம்பரம் பொதுப்பணித்துறையிடமிருந்து பிடுங்கி சென்னை மாநகர குடிநீர் வாரியம் வசம் ஒப்படைக்கப்படும் என்றுக் கூறி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்ட தமிழக உழவர் முன்னணி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

உழவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக புதிய வீராணம் திட்டம் தொடங்கிய அன்று , அன்று இருந்த இன்றைய முதலமைச்சர் வேளாண்மையை பாதிக்காமல் உபரி நீரை மட்டுமே வீராணத்திலிருந்து சென்னைக்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.
ஆனால், வீராணம் ஏரி முழுமையாக நிறைந்திருந்தும் உரிய காலத்தில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படவில்லை.  நீர் இன்றி வேளாண்மை நொடிந்து பயிர்கள் காய்கின்றன.  ஆனால் சென்னைக்கு தொடர்ந்து நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து வீராணம் ஏரி சிதம்பரம் பொதுப்பணித்துறையி கீழ் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும், உழவர்களுக்கு உடனடியாக உரிய நீரை திறந்து விடவேண்டும், வீராணம் ஏரி நீர் மேலாண்மையைக் கண்காணிக்க உழவர்கள் அடங்கிய குழுவை  ஏற்படுத்த வேண்டும் என்று கோரியும் கடலூர் மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன் படி இன்று காலை 10 மணி அளவில் சேத்தியாத்தோப்பு , வீராணம் நீரேற்றும் நிலையம் எதிரில் உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம் தலைமையில் மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான உழவர்கள் போராட்டத்துக்கு வந்துகொண்டிருந்தனர்.  தகவல் அறிந்த துணை கண்காணிப்பாளர், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உழவர் முன்னணி அமைப்பினருடன் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

  “  வேளாண்மைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடவடிக்கைகளை கண்காணித்து ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் ” எனவும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சிதம்பரம்  கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உழவர் முன்னணி அமைப்பினரிடம் தண்ணீர் திறந்துவிட விரைந்து நடவடிகைகள் எடுத்துவருவதாக கோட்டாட்சியர் இல.சுப்பரமணியம் உறுதியளித்ததின் பேரில் இன்று நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  

0 கருத்துகள்:

Post a Comment